Share via:
அஜித்குமார் போலீஸ் டார்ச்சர் மரணத்துக்கு நீதி கேட்டு நாளை விஜய்
கட்யினர் போராட்டம் நடத்துகிறார்கள். இந்தப் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர்
விஜய் பங்கேற்க உள்ளதாகத் தெரியவே, அவரது ரசிகர்கள் அணி திரள்கிறார்கள்.
ஞாயிற்றுக் கிழமை போராட்டம் நடத்தினால் மட்டுமே ரசிகர்களால் வர
முடியும் என்பதால், தனது ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ஞாயிறு அன்று நடத்துகிறார். அந்த
வகையில் நாளை நடக்க இருக்கும் போராட்டத்திற்கு எக்கச்சக்க ரசிகர்கள் குவியும் வாய்ப்பு
உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் லாப் அப் மரணங்களில் உறவினர்களை இழந்த
குடும்பத்தினரை நேரில் அழைத்து தவெக தலைவர் விஜய் சந்திக்க உள்ள தகவலும் வெளியாகியிருக்கிறது.
இன்று அவர்களை பனையூரில் சந்தித்துப் பேசும் விஜய், நாளை சென்னையில் நடைபெற உள்ள போராட்டத்தில்
அவர்களை பங்கேற்கச் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
.திருபுவனம் அருகே உள்ள மடப்புரம் கோவிலில் தற்காலிக காவலாளியாக
வேலை செய்து வந்த 27 வயது இளைஞர் அஜித்குமார் நகை திருட்டு புகாரில் விசாரணைக்காக அழைத்துச்
செல்லப்பட்டார். காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனையில்
அவரது உடலில் சுமார் 44 இடங்களில் காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் தாக்கியதற்கான
சிராய்வுகள் மற்றும் ரத்த காயங்கள் இருந்தது. அதுமட்டுமின்றி அஜித்குமாரின் தொண்டை
பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே
திருபுவனம் காவல் நிலையத்தில் காவலர்கள் விசாரணையின் போது அஜித்குமார் தப்ப முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக கால், வலிக்கு கீழே விழுந்து உயிரிழந்ததாக எஃப் ஐ ஆர் பதிவு
செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இதற்கு மாறாக பிரேதப்பரிசோதனை அறிக்கையில் அஜித்குமார் சித்திரவதைக்கு
உள்ளாக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை
ஏற்படுத்தியது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற மதுரைகிளை தாமாக முன்வந்து
விசாரணை மேற்கொண்டு வருகின்றது. மேலும் இந்த வழக்கின் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த நிலையில்,
கோவில் காவலாளி அஜித்குமார் மரணத்தை கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போராட்டம்
நடத்த கடந்த ஜூலை 3 ஆம் தேதி காவல்துறையிடம் அனுமதி கேட்டு இருந்தது. ஆனால் அன்றைய
தினம் வேறு ஒரு போராட்டம் நடந்ததால் வேறொரு நாளில் போராட்டத்தை வைத்துக் கொள்ளுமாறு
காவல்துறை அறிவுறுத்தியது.மேலும் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜூலை 6ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போராட்டம் நடத்த அனுமதி
கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது .இந்த மனு மீதான விசாரணை
இன்று நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது போராட்டம் நடத்துவது தொடர்பாக அனுமதி
பெற வேண்டும் என்றால், காவல்துறையினருக்கு 15 நாட்களுக்கு முன் மனு அளிக்க வேண்டும்
அப்படி அவர்களிடம் கூறினால் தான் முடிவெடுக்க முடியும் என்று நீதிபதி கூறினார்.
இதையடுத்து, சென்னை சிவானந்தா சாலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போராட்டம் நடத்த
நீதிபதி அனுமதி அளித்துள்ளார். மேலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் போராட்டத்தை முடித்துக்
கொள்ளவும் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் விஜய் கலந்துகொண்டால் மிகப்பெரும் அளவில்
சென்னை குலுங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை விஜய் பேச்சும் அதிகம் கவனிக்கப்படும்.
சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் மேற்கொண்டு என்ன பேசுவார் என்பது
கேள்வியாகியுள்ளது.