என்னுடைய தம்பி என்று விஜய் மீது பாச மழை பொழிந்துவந்தார் நாம் தமிழர் சீமான். ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும் தம்பிக்கு நான் பக்கபலமாக நிற்பேன், கூட்டணிக்கும் வாய்ப்பு உண்டு என்றெல்லாம் கூறிவந்தார். அதோடு விஜய் கட்சி குறித்து வெளிட்ட ஒவ்வொரு கடிதத்துக்கும் வாழ்த்து சொன்னது சீமான் மட்டுமே.

விஜய் மாநாட்டுக்குக் கிளம்பிய காலை நேரத்தில் கூட, தம்பி விஜய்யின் மாநாடு வெற்றியடைய வாழ்த்துக்கள் என்று சொல்லி தன்னுடைய பெயரைக் குறிப்பிட்டு ஏதாவது பேசுவார் என்று ஆர்வத்துடன் காத்திருந்தார். ஆனால், சீமானுக்கு ஊமக்குத்து மட்டும் தான் பரிசாகக் கிடைத்தது. சீமான் யாரை எதிரி என்று நினைக்கிறாரோ அந்த பெரியாரை தன்னுடைய முதல் தலைவர் என்று கொண்டாடத் தொடங்கினார். 

அடுத்தடுத்தும் அடி மேல் இடியே பரிசாகக் கிடைத்தது. திராவிடம் என்பது சீட்டிங், திராவிடம் என்பது உண்மை இல்லை என்று தொண்டை கிழியக் கத்திவரும் நேரத்தில், ‘திராவிடமும் தேசியமும் என் இரண்டு கண்கள்” என்று அரசியலில் தனி ரூட் போட்டுவிட்டார். அது மட்டுமின்றி, கூட்டணி ஆட்சிக்கும் இடம் உண்டு என்று அழைப்பு விடுத்தார்.

நான் தான் மூத்தவன், அரசியல் அனுபவமும் எனக்குத் தான் அதிகம். அதனால் விஜய் என்னுடன் முதலில் கூட்டணிக்கு வரவேண்டும் என்று பேசிய சீமான் இப்போது பேச்சுமூச்சு இல்லாமல் இருக்கிறார். சீமானின் கணிசமான வாக்குகள் விஜய்க்கு நிச்சயம் போய்விடும் என்பது கண் முன்னே தெரிந்துவிட்டது. அதோடு, நாம் தமிழர் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் சிலரும் விஜய் கட்சிக்குத் தாவ நேரம் பார்த்துவருகிறார்கள் என்பதும் உறுதியாகியுள்ளது.

ஆக, விஜய் வருகையினால் அதிக அடி அண்ணன் சீமானுக்குத் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link