Share via:

காமெடி நடிகர்கள் எல்லாம் நாயகனாக உருமாறும் நேரத்தில் சூப்பர்ஹிட் நடிகராக இருக்கும் நடிகர் விஜய், வடிவேலு டைப் காமெடியனாக மாறி அரசியல் செய்யத் தொடங்கியிருக்கிறார். புயலால் பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களை பனையூர் இல்லத்திற்கு நேரில் வரவழைத்து நிவாரண உதவிகளை வழங்கி ஒரு புதிய வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.
நலத்திட்ட உதவிகள் செய்த பிறகு, ‘’உங்கள் வீடுகளுக்கு நேரில் வந்து நான் நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கலாம் ஆனால் உங்களுடன் இப்படி அமர்ந்து பேச முடியாது, அங்கு வந்தால் நெரிசல் ஏற்படும் உங்கள் அனைவரிடமும் சிரமம் இல்லாமல் பேச முடியாது’’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். அவர்களிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது..?
புயல், மழையில் பாதிக்கப்பட்டு முழங்கால் தண்ணீரில் நிற்கும் மனிதர்களின் துன்பத்தை நேரில் பார்த்து ஆறுதல் கூறாமல், அவர்களை வீட்டுக்கு வரவழைத்திருப்பது ஒரு முட்டாள்தனமான பணக்காரத்தனம். இனி, தொண்டர்கள் வீட்டில் திருமணம் என்றால் தம்பதிகளை பனையூர் அழைத்து வந்து விஜய்யின் வாழ்த்துக்களை வாங்கிக்கொள்ள வேண்டும். அதேபோல் தொண்டர்கள் யாராவது செத்துப்போனால் பிணத்தை தூக்கிட்டு பனையூர் வீட்டுக்கு தூக்கிக்கொண்டு போனால், விஜய் அஞ்சலி செலுத்துவார்.
விஜய் பாணியில் மக்களும் தொண்டர்களும் நினைத்தால் என்னாகும்..? விஜய் படத்தை ஓடிடியில் பார்த்துக்கொள்வோம், யாரும் தியேட்டருக்கு வர மாட்டோம் என்று முடிவெடுத்தால் என்னாகும்..? மாநாடு நடத்தினால் வீட்டில் இருந்தே பார்த்துக்கொள்வோம் என்று ரசிகர்கள் முடிவெடுத்தால் என்னாகும்…?
வீட்டை விட்டு வெளியே வாங்க விஜய்