Share via:
பனையூரில் வைத்தே நடிகர் விஜய் அரசியல் செய்துவருகிறார் என்று
சொல்லப்படும் விமர்சனத்தை உடைப்பதற்காக பரந்தூர் போராட்டக்காரர்களை சந்திக்க விருப்பம்
தெரிவித்தார். எனவே, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், பரந்தூரில் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ள பொதுமக்களை சந்திக்க திட்டமிட்டு அனுமதி கோரி காவல்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
பொங்கல் விடுமுறை முடிந்ததும் அதாவது ஜனவரி 19 அல்லது 20 ஆகிய
தேதிகளில் அப்பகுதி மக்களை சந்தித்து பேசுவதற்கு அனுமதி அளிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட
காவல் கண்காணிப்பாளருக்கு த.வெ.க சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதம் கிடப்பில்
போடப்பட்டிருந்தது. அனுமதி கொடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்வதற்கு விஜய் தரப்பினர்
தயாராக இருந்தனர்.
இந்த நிலையில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவை சந்திக்க
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இதன்படி வரும்
20ம் தேதி த.வெ.க. தலைவர் விஜய், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை
சந்திக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
பரந்தூர்
போராட்டக்காரர்களும் விஜய்யை வரவேற்க ஆர்வமாக இருக்கிறார்கள்.
பரந்தூரில் பொதுமக்களை சந்திப்பதற்காக சுமார் 5 ஏக்கர் நிலத்தில்
முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அந்த ஏற்பாடுகளை தமிழ் வெற்றிகழக
மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பார்வையிட்டு அதற்கான முன்னேற்பாடுகள் நடவடிக்கை
எடுத்துவருகிறார். இந்த சந்திப்புக்கு அத்தனை ரசிகர்களும் ஒன்றுதிரண்டு வர துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ரசிகர்களுக்கு அடையாள அட்டையுடன் அனுமதி கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்வதாக சொல்லப்படுகிறது.
அதேநேரம், அழைப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் வருவோம் என்று ரசிகர்கள் ஆர்வம்
காட்டி வருகிறார்கள்.
பரந்தூரிலாவது செய்தியாளர்களை சந்தித்துப் பேசுவாரா விஜய்..?