லெட்டர் பேடு கட்சித் தலைவர் என்று வர்ணிக்கப்படும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி-சாலை பகுதியில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாடு வெற்றியடையச் செய்வதற்காக பக்காவாக 200 பேர் கொண்ட குழுவை நடிகர் விஜய் நியமனம் செய்திருப்பது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரம், மாநாட்டுக்கு வானிலை ஒத்துழைக்காது என்று கிடைத்திருக்கும் செய்தி விஜய் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

அரசியல் ஆசை இருந்தாலும் நடிகர் விஜய் இப்போது அரசியலுக்கு வருவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவே இல்லை. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத விதமாக தமிழக வெற்றிக் கழகத்தை அதிரடியாக தொடங்கினார் நடிகர் விஜய். இதன் முதல் மாநாட்டில் கொள்கை விளக்கம் அளிக்கப்படும் என்று தெரிவித்து வரும் 27ம் தேதி மாநாடு நடத்துகிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை வெற்றிக் கொள்கைத் திருவிழா மாநாடு என்று அறிவித்திருக்கிறார் விஜய். இந்த மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக புஸ்ஸி ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதோடு மாநாட்டு ஒருங்கிணைப்பு குழு, பொருளாதார குழு, சட்ட நிபுணர்கள் குழு, வரவேற்பு குழு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழு, சுகாதாரக் குழு, போக்குவரத்து ஒருங்கிணைப்பு குழு, வாகன நிறுத்த குழு, உள்ளரங்க மேலாண்மை குழு, மேடை ஒழுங்கு அமைவு குழு, இருக்கை மேலாண்மை குழு, தீர்மானக் குழு, உபசரிப்பு குழு, திடல் பந்தல் அமைப்பு உதவி குழு, பாதுகாப்பு மேற்பார்வை குழு, மகளிர் பாதுகாப்பு குழு, அவசர கால உதவி குழு, கொடிக் கம்பம் அமைப்பு குழு, வழிகாட்டும் குழு, வானிலை தகவல் பகிர்வு குழு, கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பு குழு, ஊடக ஒருங்கிணைப்பு குழு, சமூக ஊடக குழு, பேச்சாளர்கள் மற்றும் பயிற்சி குழு, விளம்பர குழு, துப்புரவு குழு ஆகியவை அமைக்கப்பட்டு இருக்கின்றன.

200 நிர்வாகிகள் மேற்பார்வையில் இந்த குழுவினர் மாநாட்டுப் பணிகளை முழுமையாக விஜய் நேரடியாக கண்காணிக்க இருக்கிறார். இது மட்டும் அல்லாமல் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் மருத்துவக் குழுவினரும் மாநாட்டு பணிகளுக்கு நியமனம் செய்யப்பட இருக்கிறார்கள். இந்தப் பட்டியலைப் பார்த்து ரசிகர்கள் குஷியாகியிருக்கிறார்கள். அத்தனை கட்சிகளும் தடுமாறும் வகையில் முதல் பாலில் சிக்ஸர் அடித்திருக்கிறார் விஜய் என்று ஊரெங்கும் போஸ்டர் ஒட்டி கொண்டாடுகிறார்கள்.

விஜய் இப்படி திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்தாலும், மாநாட்டுக்கு பெரும் சிக்கலாக மழை இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இன்னும் இரண்டு நாட்களில் பருவ மழை தொடங்க இருப்பதால் மாநாட்டு பந்தல் அமைப்பது தொடங்கி ஏகப்பட்ட சிக்கல்களை விஜய் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கிறார்கள்.

இதையும் சமாளிப்பார் விஜய் என்று அவரது ரசிகர்கள் குஷியாக இருக்கிறார்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link