சென்னை தொடங்கி தமிழகம் முழுக்க சின்னஞ்சிறு பெண் குழந்தைகளுக்கு பாலியல் வன்முறை அதிகரித்துவரும் செய்தி அத்தனை பேரையும் அதிர வைக்கிறது. எதிர்க்கட்சிகள் அனைவரும் கண்டனம் தெரிவித்த நிலையில், பெண்கள் பாதுகாப்புக்காக தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நடிகர் விஜய் குரல் கொடுத்திருக்கிறார்.

நடிகர் விஜய் கொடுத்திருக்கும் அறிக்கையில், ‘’சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது. பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன.

பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க, நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, அரசு தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு யோசனை தெரிவித்துள்ளது.

இதற்கு மதிப்பளித்து, தமிழக அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் வலியுறுத்துகிறேன்…’’ என்று குரல் கொடுத்திருக்கிறார்.

இதற்கு உடன்பிறப்புகள், ‘’அதானி விவகாரத்திற்கு குரல் கொடுக்காமல் அமுக்கமாக இருக்கும் விஜய் சட்டம் ஒழுங்கு பற்றி பேச அவசியமே இல்லை, அதையெல்லாம் அரசாங்கம் பார்த்துக்கொள்ளும். வாயை பொத்துங்க”’ என்று எகிறுகிறார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link