Share via:
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் நுழைந்ததும் துணைப் பொதுச்செயலாளர்
பதவி ஆதவ் அர்ஜூனாவுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து கட்சி நிர்வாகிகளை மாற்ற வேண்டும்
என்று ஆதவ் அர்ஜூனா கூறிய திட்டத்தை திருமாவளவன் ஏற்றுக்கொண்டார்.
தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு
சட்டமன்ற தொகுதிக்கும் மாவட்ட செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர்கள், கிளை செயலாளர்கள்,
ஊடக ஒருங்கிணைப்பாளர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆகியோர் அடங்கிய நிர்வாக குழுவை
நியமிக்கும் வேலை ஆதவ் அர்ஜூனாவுக்கு ஒதுக்கப்பட்டது.
ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர், ஒரு மாவட்ட பொருளாளர், 4
மாவட்ட துணைச் செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதில்
நிலப்பரப்பின் அடிப்படையில் 2 மாவட்ட துணைச் செயலாளர்கள், ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு
ஒரு பெண் மாவட்ட துணைச் செயலாளர், தலித் அல்லாத ஒரு மாவட்ட செயலாளர் என நியமிக்கப்படுவர்.
ஊடக ஒருங்கிணைப்பாளர் ஒட்டுமொத்தமாக ஒரு தொகுதி மாவட்டத்திற்கு ஒருவர் நியமனம் செய்யப்படும்
வேலைகள் நடந்தன. இந்த பதவிகளில் தன்னுடைய ஆதரவாளர்களை ஆதவ் அர்ஜூனா நுழைத்திருப்பதாகக்
கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’
என்று பேசி அடிமட்டத் தொண்டர்கள் வரையிலும் ஆதவ் அர்ஜூனா ஆதரவு பெற்றார். இதே விஷயத்தை
விஜய் மேடையில் பேசியதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆகவே, ‘ஆதவ் அர்ஜூனா பேசியதில்
என்ன தவறு’ என்று விசிக நிர்வாகிகள் பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
ஆதவ் அர்ஜூனாவும் மீண்டும் திருமா கட்சியில் இணையும் முடிவில்
இல்லை. ஆகவே, பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்குப் போராடும் தலைவனாக தன்னை மாற்றிக்கொள்வதற்கு
உத்திகள் வகுத்து வருகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளை இணைத்துக்கொண்டு
புதிய கட்சி தொடங்கும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது.
எங்கள் கட்சிக்கு வந்தால் விஜய் கட்சியுடனும் அ.தி.மு.க.வுடனும்
கூட்டணி சேரலாம், தேர்தல் செலவுகளை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்றெல்லாம் பேசி
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை வளைக்கும் வேலையில் ஆதவ் அர்ஜூனா கூட்டணி செய்துவருகிறது.
இந்த விவகாரம் தெரிந்து திருமாவளவன் அதிர்ச்சியில் இருக்கிறார்.