Share via:
மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் மாநிலங்களில் இன்று காலை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது.
230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாகவும், சத்தீஷ்கரில் 70 தொகுதிகளுக்கான 2ம்கட்ட வாக்குப்பதிவும் இன்று காலையில் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது.
இந்த தேர்தலில் ஆட்சியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. களத்தில் இறங்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட கட்சியினர் தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களிடம் வாக்குகளை சேகரித்தனர்.
அதன்படி காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ட்டோரும், பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். நேற்று முன்தினம் (நவ.15) மாலையுடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில், இன்று (நவ.17) தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 5 மணிவரையில் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்க வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஷ்கர் மாநிலத்தை பொறுத்த வரையில் கடந்த 7ம் தேதி முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கடந்த 7ம் தேதி ஒரு சில இடங்களில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தியதால் இன்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.