Share via:

கோவை ஈச்சநாரியில் அ.தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகளில் ஒருவரான
வேலுமணியின் மகன் விகாஸ் – தீக்ஷனா திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவுக்கு
பா.ஜ.க.வின் முக்கியப் புள்ளிகள் அனைவரும் வந்து சேர்ந்ததும், எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளாததும்
ஏகப்பட்ட அரசியல் யூகங்களைக் கிளப்பியிருக்கிறது.
வேலுமணி இல்லத் திருமண விழாவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன்,
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை, நடிகை குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.க.
பிரமுகர்கள் ஏகப்பட்ட தலைவர்கள் வரிசையாக வந்து ஆஜரானார்கள். பா.ஜ.க. மாநாடு போலவே
எக்கச்சக்க பிஜேபி புள்ளிகள் தென்பட்டார்கள். அமைச்சர் எல். முருகன், அண்ணாமலை, தமிழிசை
ஆகியோர் கால்களில் மட்டும் மணமக்கள் விழுந்து ஆசி பெற்றார்கள். அ.தி.மு.க. சார்பில்
மூத்த தலைவர்களான செங்கோட்டையன், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் திருமண விழாவில்
பங்கேற்றனர். ஆனால், இவர்களுடைய காலில் மணமக்கள் விழவில்லை.
எந்த நேரமும் எடப்பாடி பழனிசாமி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவர் வரவில்லை. இதுகுறித்து வேலுமணி தரப்பினர், ‘’தேனி விழா முன்கூட்டியே முடிவு
செய்யப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி வரவில்லை. வரும் 10ம் தேதி கொசிடியா வளாகத்தில்
நடைபெறும் வரவேற்பு வைபத்தில் கலந்துகொள்வார்’’ என்று தெரிவிக்கிறார்கள்.
அதேநேரம் இபிஎஸ் நேற்றைய விழாவில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது
குறித்துப் பேசும் அ.தி.மு.க. முக்கியப் புள்ளிகள், ‘’இந்த விழாவில் அண்ணாமலை உள்ளிட்ட
தலைவர்கள் வருகை உறுதியான காரணத்தாலே எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. அண்ணாமலை உள்ளிட்ட
தலைவர்களைப் பார்த்தால் மரியாதை நிமித்தமாகப் பேசவேண்டியிருக்கும். இது, கூட்டணி பேச்சு
என்று அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு குழப்பம் உண்டாக்கும். இதை தவிர்க்கவே கலந்துகொள்ளவில்லை.
ஆனால், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் வேலுமணி
உறுதியாக இருக்கிறார். ஈஷா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் அமித் ஷாவிடம்
இதை வேலுமணி பேசியிருக்கிறார். ஆகவே, தேனி விழா முதல் நாள் இரவே முடிந்துவிட்டாலும்
எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை. இருவருக்கும் இடையில் லடாய் நடக்கிறது. 10ம்
தேதி விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வார். பா.ஜ.க. தரப்பில் அன்றும் முக்கியத்
தலைவர்கள் கலந்துகொண்டால் எடப்பாடி வரமாட்டார்’’ என்கிறார்கள்.