Share via:

அமைச்சர் சேகர் பாபுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர்
வேல்முருகனுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்துக்குப் போய் ஸ்டாலினை கொந்தளிக்க வைத்தது.
இந்த விவகாரம் நாடகமா அல்லது கூட்டணியில் இருந்து வெளியே தள்ளப்படுவாரா என்பது அரசியல்
பரபரப்பாக மாறியுள்ளது.
சட்டப்பேரவையில் நேற்று பாமக உறுப்பினர் ஜி.கே.மணி பேசும்போது,
தமிழக அரசின் மொழிக்கொள்கை மற்றும் கல்விக்கொள்கை தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது
குறுக்கிட்டுப் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், அதிமுக ஆட்சியில்
ஒரு துறைசார்ந்த ஆள் தேர்வு நடத்தப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்தார்.
அதற்கு கோபமான அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார்,
“வேல்முருகன் அவையில் தவறான தகவலை தெரிவித்துள்ளார். அதனால் அவரது கருத்தை அவைக்குறிப்பில்
இருந்து நீக்க வேண்டும்” என்றார். உடனே இதற்கு
பதில் அளிக்க தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று இருக்கையில் இருந்தவாறு வேல்முருகன்
முறையிட்டார். அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றதும் பேரவைத் தலைவர் இருக்கையை
நோக்கி சென்று கூச்சலிட்டார்.
கோபமான அமைச்சர் சேகர்பாபு,
’’உங்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்க முடியுமா” என அமைச்சர் சேகர்பாபு கூற, அவர்
முன்பு சென்று வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சேகர்பாபுவுக்கு ஆதரவாக மற்ற
அமைச்சர்கள் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் வேல்முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின் எழுந்து,
“பேரவைத் தலைவர் இருக்கை அருகில் வந்து மிரட்டும் தொணியில் பேசி, அவையை மீறிய
செயலில் ஈடுபட்டது வேதனை அளிக்கிறது. அவை விதியை மீறி அதிகபிரசங்கித்தனமாகப் பேசுகிறார்.
அவையில் வேல்முருகன் கோபமாகப் பேசினாலும், அதில் குணம் இருக்கும் என்பதால் அவரது பேச்சை
அமர்ந்து கேட்பேன். அவையில் கைநீட்டி கூச்சலிடுவது முறையற்ற செயல். அதை அவர் திருத்திக்கொள்ள
வேண்டும். அவர் மீது பேரவைத் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, பேரவைத் தலைவர் அப்பாவு, “முதல்வர் ஸ்டாலின் இதுபோன்று
எப்போதும் கூறியதில்லை. அமைச்சர்களிடம் கை நீட்டி பேசியது நாகரீகமற்ற செயல். கடந்த
4 ஆண்டுகளில் இதுபோன்று நடந்ததில்லை. இருந்த இடத்தைவிட்டு எழுந்து வந்து சபை மாண்பை
குலைக்கும் வகையில் பேசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இனிமேல் இதுபோன்று யார் நடந்துகொண்டாலும்
கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வேல்முருகன் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்”
என்றார்.
பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன்,
‘’தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தில் கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் பின்பற்றப்படவில்லை.
எஸ்.ஐ தேர்வுகளில் ஒருவரைக்கூட மேற்கூறிய இடஒதுக்கீட்டில் தேர்வு செய்யவில்லை. தமிழ்
மொழியை தமிழகத்தில் ஆட்சி மொழியாக, அலுவல் மொழியாக, பயிற்று மொழியாக கட்டாயம் நடைமுறைப்படுத்த
வேண்டும் என்பதை தான் குறிப்பிட்டேன். ஆனால், நான் என்ன பேச வருகிறேன் என்பதையே புரிந்து
கொள்ளாமல், அதிமுகவினரும், அதிமுகவில் இருந்து திமுக அமைச்சராக இருக்கும் சேகர்பாபுவும்
கூச்சலிட்டனர். மக்களவையில் பேச வாய்ப்பளிக்குமாறு இருக்கையில் இருந்து எழுந்து சென்று,
அவைத் தலைவரிடம் முறையிடுவது போன்றுதான் இங்கும் செய்தேன். முதல்வரும் எனது செயலை தவறாகப்
புரிந்து கொண்டது வருத்தம் அளிக்கிறது.’’ என்றார்.
இந்நிலையில், தெலுங்கன் சேகர்பாபு, படையாச்சி வேல்முருகனை கெட்ட
வார்த்தை போட்டு சட்டசபையில் திட்டி விட்டார் என்று ஒரு தகவலைக் கிளப்பியுள்ளனர். வேல்முருகனுக்கு
வெட்கம், மானம் இருந்தால் கூட்டணியில் இருந்து வெளியில் வரவேண்டும் என்று கூறுகிறார்கள்.
வேல்முருகன் கட்சியினர், ‘’கெட்ட வார்த்தையில் எல்லாம் திட்டவில்லை.
அதிகப்பிரசங்கித்தனம் என்று சேகர் பாபு கூறினார். அதையே முதல்வரும் பேசியிருக்கிறார்.
இதுக்கெல்லாம் கூட்டணியில் இருந்து வந்தால் எம்.எல்.ஏ. பதவி யார் கொடுப்பார்கள்? என்று
கேட்கிறார்கள்.