Share via:
மும்மொழி கொள்கைக்கு எதிராக சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்
பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், ’’தயிர் சாதம் சாப்பிடும் உங்களுக்கே
இவ்வளவு கோபம் வந்தால்.. நல்லி எலும்பு சாப்பிடும் எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்?’’
என்று பேசிய விவகாரம் தமிழக பா.ஜ.க.வினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்று
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளதற்கு தமிழகத்தில் ஆளும் திமுக
கூட்டணிக் கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகே
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர்
வேல்முருகன், “ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து ஜனநாயக முறைப்படி செயல்படுகிறோம். ஆனால் நம்மைத்
தூசியாகக் கூட மதிக்கவில்லை. எனவே ஒன்றிய அரசிற்கு சரியான சவுக்கடி கொடுக்க வேண்டும்.
ஒருபோதும் ஒன்றிய அரசு அலுவலகங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என முடிவு எடுப்போம்.
வரி கொடா இயக்கம் தொடங்குவோம்; சுங்கத்தைத் தவிர்ப்போம். ஜி.எஸ்.டி
கொடுக்க மாட்டோம் என முடிவு எடுப்போம். ஒன்றிய அரசு திட்டங்கள் அனைத்தையும் முடக்குவோம்
என முடிவு எடுங்கள்; மோடி நம் முன் மண்டியிடுவார். கேள்வி கேட்டாலே நிர்மலா சீதாராமனுக்கு
கோபம் வருகிறது. நாளை என்.எல்.சியில் கச்சேரி வைக்கிறேன். என்.எல்.சி கதவைப் பூட்டினால்
போதும். தமிழக முதலமைச்சரே இதுதான் சரியான நேரம்… இதை சரியான களமாக மாற்றுங்கள்…
என்னை கிரவுண்டுல இறங்கி விளையாட அனுமதிங்க…” என்று ஆர்ப்பாட்டத்தில் வேல்முருகன்
ஆவேசமாகப் பேசினார்.
இந்த பேச்சு பா.ஜ.க.வினரை அதிர வைத்துள்ளது. எனவே தமிழக பா.ஜக.
தலைவர்களில் ஒருவரான நாராயணன், ‘’வன்முறையை தூண்டும் வகையில் பேசியதோடு, மத்திய அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்த தூண்டும் விதமாகவும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும், பிரதமரை ஒருமையில் பேசி, கீழ்த்தரமாக விமர்சித்து, இந்தியாவின் நிதியமைச்சரை தரக்குறைவாக பேசிய திமுக வின் சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி வேல்முருகனை தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், பெண் வன்கொடுமை சட்டத்திலும், ஜாதிய வன்மத்தை தூண்டும் வகையில் பேசியதற்காக உரிய சட்டத்திலும் கைது செய்வதோடு, குண்டர் சட்டத்திலும் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்.
மேலும், மத்திய அரசு அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அளிக்க உரிய நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும். தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வகையில் செயல்படும் வேல்முருகன் மீது வழக்கு பதிந்து, சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும். ஒரு முறை திகார் சிறைக்கு அனுப்புவித்தால் தான் தொடர்ந்து தீவிரவாத, பிரிவினைவாத செயல்களை தூண்டிவிடும் இந்த நபருக்கு அறிவு வரும்.’’ என்று கொதித்திருக்கிறார்.