மாவீரர் நாளை முன்னிட்டு வழக்கமாக திருமாவளவனும் சீமானும் மட்டுமே மேடை போட்டு பேசுவார்கள். அதன்படி மதுராந்தகத்தில் சீமான் கூட்டம் நடத்திய அதே நேரத்தில் திருச்சியில் தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் ஒரு பெருங்கூட்டத்தைக் கூட்டியிருக்கிறது. வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்த கூட்டத்திலும் எக்கச்சக்கப் பேர் கலந்துகொண்டதையடுத்து யாருக்கு அதிகக் கூட்டம் என்று சமூகவலைதளத்தில் மோதல் நடந்துவருகிறது. சீமானுக்கு எதிரியாக வேல்முருகனை நிறுத்தி சச்சரவைத் தொடங்கியிருக்கிறார்கள்.

மதுராந்தகம் கூட்டத்தில் பேசிய சீமான் பேச்சுக்கள் வழக்கம் போல் வைரலாகிவருகின்றன. ‘’சேர சோழ பாண்டிய மூவேந்தர்களும் சேர்ந்து நின்றிருந்தால் இன்று உலகம் தமிழர் உலகமாக இருந்திருக்கும். எனக்கு காவி உடைபோட்டு சங்கி ஆக்க பார்க்கிறார்கள்… எனக்கு எந்த உடையும் பொருத்தமாக இருக்கும் ஆனால் காவி உடை பொருஇத்தமாக இருக்காது… அது மிகத்தவறு, அசிங்கமானது, நான் அதை வெறுக்கிறேன்’’ என்றெல்லாம் பேசிய சீமான் அடுத்ததாக, ‘’நானும் ரஜினியும் இரண்டரை மணி நேரம் பேசினோம். நாங்கள் என்ன பேசினோம் என்பது எங்களுக்குத் தான் தெரியும்.

ரஜினிகாந்த் சினிமா சூப்பர் ஸ்டார் என்றால் நான் அரசியல் சூப்பர்ஸ்டார். நாங்கள் எதுவும் பேசிவோம். இரண்டு சூப்பர் ஸ்டார்கள் சந்தித்ததால் மற்றவர்களுக்குப் பயம் வந்துவிட்டது. எனவே,  அதை பற்றி இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. நான் தம்பி படத்துக்குப் பிறகு இரண்டு படங்களின் கதையைச் சொன்னேன். சிறுவர்களின் கோபத்தைப் பற்றி படமெடுக்கச் சொன்னார். அதற்கு சீமானின் சீற்றம் என்று பெயர் சூட்டச் சொன்னார்’’ என்றெல்லாம் வழக்கம்போல் சூடாகப் பேசி முடித்தார்.

அதேநேரம் திருச்சியிலும் போட்டிக் கூட்டம் நடந்திருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் மாநில முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன், புகழேந்தி மாறன், தனசேகரன் ஆகியோர் “தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம்” என்ற புதிய அமைப்பினர் நடத்திய இந்தக் கூட்டத்தில் சீமானுக்கு போட்டியாக தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகனை அழைத்து வந்து பங்கேற்க வைத்தனர். இங்கேயும் அதிக அளவில் கூட்டம் கூடியிருக்கிறது.

திருச்சியில் தான் அதிகக் கூட்டம் என்று விஜய் கட்சியினரும் தி.மு.க.வினரும் போட்டி போட்டி செய்தியைப் பரப்பி வருகிறார்கள். இதற்குக் காரணமான வேல்முருகனை கொடூரமாக விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் நாம் தமிழர் தம்பிகள். அரசியல் சூப்பர் ஸ்டாருக்கு இப்படியெல்லாம் சிக்கலா..?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link