Share via:

வி.ஏ.ஓ. மீது லாரி ஏற்றி கொலை முயற்சி! டி.டி.வி. தினகரன் கண்டனம்!
வி.ஏ.ஓ. மீது லாரியை ஏற்றி கொலை செய்ய முயற்சி நடந்த சம்பவம் குறித்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதை தடுக்க முயன்ற வி.ஏ.ஓ மீது லாரியை ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
அந்த செய்தியில் ஆயக்குடி அருகே தொடர்ந்து அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க சம்பவ இடத்திற்கு வி.ஏ.ஓ கருப்பசாமி மற்றும் அவரின் உதவியாளர்கள் சென்றுள்ளனர்கள். அவர்கள் மீது மணல் கடத்தலில் ஈடுபட்ட சிலர் லாரியை ஏற்றி கொலை முயற்சி செய்ய முற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டின் வி.ஏ.ஓ கொலை செய்யப்பட்டதன் சுவடே இன்னும் மறையாத நிலையில், மீண்டும் ஒரு கொலை முயற்சி சம்பவம் அரங்கேறியதாக வரும் செய்தி அரசு ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது எந்தவித பாரபட்சமுமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இச்சம்பவத்தில் எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கை, இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
