Share via:
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் திருமாவுக்கு
இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டன. விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும்,
சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் பானை சின்னத்திலும் போட்டியிட்டு ஜெயித்தனர்.
அதேபோல் ம.தி.மு.க.வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு ஈரோட்டில்
கணேச மூர்த்தி உதய சூரியன் சின்னத்தில் ஜெயித்தார், வைகோவுக்கு மாநிலங்களவை பதவி கொடுக்கப்பட்டது.
இந்த 2024 தேர்தலில் இரண்டு கட்சிகளும் கூடுதலாக ஒரு சீட் கேட்டு
அடம் பிடித்துவந்தன. இந்த நிலையில் அதற்கு கண்டிப்பாக வாய்ப்பே இல்லை என்று உறுதியாக
தெரிவிக்கப்பட்டு விட்டது. ஆகவே, வேறு வழியின்றி இரண்டு கட்சிகளும் கையெழுத்து போடுவதற்கு
சம்மதித்துள்ளன.
அதேநேரம், கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியை சேர்த்து
10 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் தேனி தொகுதியில் மட்டும் காங்கிரஸ் தோற்றுப்போனது.
ஆகவே, இந்த முறை புதுச்சேரி சேர்த்து 9 இடங்கள் கொடுப்பதற்கு தி.மு.க. முன்வந்துள்ளது.
ஆனால், கடந்த முறை போலவே 10 தொகுதிகள் கேட்கிறது காங்கிரஸ்.
கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் நின்ற பாரிவேந்தர் வெளியேறிய
நிலையில், அந்த சீட் கமல்ஹாசன் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் கோவையில் டார்ச்
லைட் சின்னத்தில் நிற்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. இந்த தேர்தலில் 21 இடங்களில் நிற்க விரும்பும் நிலையில்
கார்கே பேச்சுவார்த்தை நடத்தி அதே 10 இடங்கள் பெற்றுத்தர வேண்டும், பேச்சுவார்த்தை
சுமுகமாக முடியும் என்று காங்கிரஸ் நம்பிக்கொண்டு இருக்கிறது. எப்படியாயினும் இரண்டு
நாட்களில் காங்கிரஸ் கையெழுத்து போட்டுவிடும் என்கிறார்கள்.
ஆக, கூட்டணி உடைவதற்கு வாய்ப்பே இல்லை.