Share via:
ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு இந்தியாவில் விடுதலைப்புலிகள்
அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை
நீட்டிக்கப்படுகிறது. இந்த முறையும் தடைக்கு எதிராக மனு கொடுத்திருக்கிறார் வைகோ.
விடுதலைப்புலிகள் குறித்தும் மாவீரன் பிரபாகரன் குறித்தும் தினமும்
பேசிவரும் சீமான் இந்த தடைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச்
சட்டத்தின் படி, சட்ட விரோத அமைப்பாக அறிவித்து, ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடையை14.05.2024
அன்று , மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் அரசாணை
வெளியிட்டது.
அந்தத் தடை அறிவிப்பின்படி, முகாந்திரங்களை ஆராய்ந்து முடிவு செய்ய,
சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டப்படி, டெல்லி உயர்நீதிமன்ற நீதியரசர் மன்மீத்
பிரிட்டம் சிங் அரோரா தலைமையில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட தீர்ப்பாயத்தை
அமைத்து 05.06.2024 அன்று ஒன்றிய அரசு மீண்டும்
அடுத்த அரசாணை வெளிட்டது.
அத்தீர்ப்பாயம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப்படி,
விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்யப்பட்ட அமைப்பாக ஏன் அறிவிக்க கூடாது? விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேரிலோ
அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ 23.07.2024 மாலை 4 மணிக்கு இத்தீர்ப்பாயத்தில் விளக்கம்
அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
அதன் அடிப்படையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர்
வைகோ அவர்கள் சார்பில், இந்தத் தீர்ப்பாயத்தில், விடுதலைப்புலிகள் அமைப்புக்கு, இந்திய
ஒன்றியத்தில், தடை விதிக்க முகாந்திரம் இல்லை. ஆகவே, அந்த அமைப்புக்கு விதிக்கப்பட்டிருக்கும்
தடையை, இந்திய ஒன்றிய அரசு இரத்து செய்ய வேண்டுமென்றும், வழக்கில் தன்னை ஒரு தரப்பினராக
சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் 23.07.2024 மாலை டெல்லியில் தீர்பாயத்தில் மனுத்தாக்கல்
செய்யப்பட்டது.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தாக்கல் செய்த மனுவை தீர்ப்பாயம்
ஏற்றுக்கொண்டது. ஆகஸ்டு 7ம் தேதிக்கு விசாரணை ஓத்தி வைக்கப்பட்டது. கடந்த ஒவ்வொரு ஐந்தாண்டுகளிலும்
இதே போன்ற மனுவை வைகோ அவர்கள் நீதிமன்ற தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்து இருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது. வைகோ ஒருவர் மட்டுமே விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டதை
எதிர்த்துப் போராடுகிறார். இதுவரை இந்த விஷயத்தில் சீமான் எதுவுமே செய்ததில்லை என்பது
தான் ஆச்சர்யம்.