Share via:
தங்களுடைய கூட்டணிக்கு அ.தி.மு.க. எப்படியும் வந்துவிடும் என்ற
காரணத்தாலே ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை பிரதமருடன் மேடை ஏற்றாமல் அண்ணாமலை
தாமதம் செய்துவந்தார். ஆனால், அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்குக்கு வாய்ப்பே இல்லை என்பது
போல் சம்பவம் செய்திருக்கிறார் கே.பி.முனுசாமி.
கிருஷ்ணகிரியில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி
செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’தமிழர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்கிறார்கள் மத்திய
அமைச்சர்கள். எல்.முருகன் தமிழகத்தில் போட்டியிட்டு ஜெயிக்க முடியாது என்பதாலே அவரை
மாநிலங்களவை உறுப்பினராக்கிவிட்டனர்.
தமிழக மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற தைரியமும் நம்பிக்கையும்
பா.ஜ.க.வுக்கு இருந்தால், தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் மத்திய அமைச்சர்கள்
நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோரை மாநிலத்தின் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட
வைக்கட்டும். அப்போது தான் இது திராவிட மண் என்பது அவர்களுக்குப் புரியும்.
தமிழக மக்கள் நிலைமை குறித்து நன்கு அறிந்தவர்கள், யார் ஆட்சிக்கு
வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவு பெற்றவர்கள். இதனால்தான் கடந்த 50 ஆண்டுகளாக தேசிய
கட்சிகள் இங்கு காலூன்ற முடியாமல் திராவிட கட்சிகள் தொடர்ந்து ஆட்சி செய்து வருகின்றன.
வரும் தேர்தலில் பாஜக 300 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறப்
போகிறது,
“மற்றொரு திராவிடக் கட்சியான திமுகதான் எங்களுக்குப் போட்டியாளர்,
நீங்கள் (பாஜக) அல்ல. நீங்கள் இங்கே இரண்டாவது பெரிய கட்சி என்று இப்போது நீங்கள் கூறலாம்,
ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான், நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள், எத்தனை
தொகுதிகளில் தேர்தலில் டெபாசிட் செய்த பணத்தைக் கூட இழக்க நேரிடும் என்பது எங்களுக்குத்
தெரியும்” என்றார்.
நேரடியாக பா.ஜ.க. மீது கே.பி.முனுசாமி
பாய்ந்திருப்பதை அடுத்து, இனி பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று அ.தி.மு.க. திட்டவட்டமான
முடிவுக்கு வந்திருப்பதை உணர்ந்துவிட்டனர். பா.ம.க., தே.மு.தி.ம.வும் திசை மாறிவிட்ட
நிலையில் ஜி.கே.வாசனுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள்.