Share via:
தமிழக வெற்றிக் கழகத்தின்
சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக
பரிசு வழங்கி பாராட்டும் விழா இன்று நடத்தப்பட்டது.
இந்த விழாவில் பேசிய
நடிகர் விஜய், ‘’இன்று நான் நீட் தேர்வு பற்றி பேசவேண்டி இருக்கிறது. ஒன்றிய அரசு கொண்டுவந்த
இந்த தேர்வு நியாயமானதாக இல்லை’’ என்று முதன்முதலாக மத்திய அரசு மீது வெளிப்படையாக
குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். குறிப்பாக ஒன்றிய அரசு என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது
மிகப்பெரிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
அதோடு, ‘’மாநிலப்பட்டியலில்
இருந்த கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதே இத்தனை பிரச்னைகள். மேலும் நீட் தேர்வில்
ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவதைப் பார்க்கிறோம். கிராமப்புறங்களில் படித்துவரும் தாழ்த்தப்பட்டவர்கள்,
பிறப்படுத்தப்பட்டவர்களுக்கு இது மிகப்பெரும் ஆபத்தாக இருக்கிறது. ஆகவே, நீட் தேர்வு
மாநிலங்களுக்குத் தேவையில்லை. மத்திய அரசு நடத்திவரும் ஜிப்மர், எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களில்
வேண்டுமானால் நடத்திக்கொள்ளட்டும். தமிழகத்திற்குத் தேவையில்லை’’ என்று தன்னுடைய கருத்தை
தைரியமாக வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
‘’நான் பேசியதால்
உடனடியாக நீட் தேர்வு நின்றுவிடப் போவதில்லை, நிறுத்த விடவும் மாட்டார்கள். ஆனால்,
எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியது அவசியம்’’ என்றவர் மாணவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும்
வகையில், ‘’நீங்க படிப்பை சந்தோஷமா ஜாலியா
படிங்க. ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. எனவே, எதிர்பார்த்த படிப்பு கிடைக்கவில்லை
என்றால், அது ஒரு விஷயமே இல்லை. வெற்றி நிச்சயம்’’ என்று உரக்கக் கூறியிருக்கிறார்.
ஒரு அரசியல்வாதியாக
பக்காவாக காய் நகர்த்தியிருக்கிறார் நடிகர் விஜய். இந்த நீட் எதிர்ப்பு தி.மு.க.வுக்கும்
பா.ஜ.க.வுக்கும் பக்கா ஆச்சர்யம். நடிகர் விஜய்யை பா.ஜ.க.வின் பி டீம் என்று கூறிவரும்
தி.மு.க.வினர் திக்குமுக்காடியிருக்கிறார்கள்.