Share via:
இந்தியாவிற்கு தப்பிவந்திருக்கும் ஷேக் ஹசீனா இன்னும் இரண்டு நாட்கள்
இங்கு தான் இருப்பார் என்று கூறப்படுகிறது. அவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்பதால்
லண்டலின் தங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், ஐக்கிய அரபு அமீரகத்திடமும்
கோரிக்கை வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு ஆபத்து நிலவுவதாகவும்
அவர்களை இந்தியாவில் குடியேற்றம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
வங்க தேசத்தில் இருக்கும் இந்துக்களை பாதுகாக்க வேண்டும் என்று அங்கு இஸ்லாமியர்கள்
கூறிவந்தாலும் சில இடங்களில் வன்முறை வெடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அரசு வேளைகளில் 30% இட ஒதுக்கீடு
கொடுப்பதற்கு எதிராக தேசமெங்கும் எழுந்த போராட்டங்கள்தான் இதற்கு ஆரம்பம். இந்த போராட்டத்தை
அடக்குவதற்காக 200க்கும் மேற்பட்டவர்கள் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
20,000க்கும் மேல் காயமடைந்திருந்தனர். சுமார் பதினோராயிரம் பேர் சிறைப்படுத்தப்பட்டிருந்தனர்.
தேசம் முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, இணையத் தொடர்புகள் அனைத்தையும் துண்டித்தது.
இவை எல்லாம் நடந்தும் போராட்டம் தணியாததால் உச்ச நீதிமன்றம் அந்தத் திட்டத்தை வாபஸ்
வாங்கி விட்டது.
இருப்பினும் அரசின் அடக்குமுறை மக்களின் கோபத்தை மேலும் வலுப்படுத்தவே
போராட்டம் வலுப்பெற்று ஹசீனாவை நாட்டை விட்டு விரட்டும் அளவுக்குத் தீவிரம் அடைந்திருக்கிறது.
இப்போது தேசம் ராணுவத்தின் கைகளுக்குப் போயிருக்கிறது. வேறு வழியில்லை. அடுத்ததாக எதிர்க்
கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று ராணுவம்
அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில் இஸ்லாம் தொழிலதிபர் உயிருடன் எரிக்கப்பட்ட வீடியோ
நாடெங்கும் பரவியது. அந்த நபர் இந்து என்றும் இந்துக்களுக்கு ஆபத்து என்றும் சொல்லப்பட்டதை
அடுத்து 1 கோடிக்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்குத் திரும்பும் அச்சத்தில் இருக்கிறார்கள்
என்று சொல்லப்படுகிறது. ஹசீனாவுக்கு இந்தியா கொடுத்திருக்கும் பாதுகாப்பு அந்த நாட்டு
இஸ்லாமியர்களுக்கு வெறுப்பு உண்டாக்கியிருக்கிறது.
ஆகவே, இந்தியாவுக்குத் திரும்பும் இந்துக்கள் பாதுகாப்புக்கு அவசர
எண் ஒன்றை ராணுவம் அறிவித்திருக்கிறது. அதோடு ஆபத்தான இடத்தில் இருக்கும் இந்துக்கள்
பட்டியலை எடுத்து திருப்பியனுப்பும் முயற்சி நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தற்போது வங்கதேசத்தில் சுமார் 1.3 கோடி இந்துக்கள் இருப்பதாக சொல்லப்படும்
சூழலில் வங்கதேச விவகாரம் குறித்து விளக்கமளிக்க நாடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தை
மத்திய அரசு கூட்டியுள்ளது. கூட்டத்தில் ராகுல் காந்தி, டிஆர் பாலு போன்ற எதிர்கட்சித்
தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளது
குறித்தும், வங்கதேசத்தில் நடந்து வரும் அரசியல் மாற்றம், கலவரம் குறித்தும் கூட்டத்தில்
விவாதிக்கப்படுகிறது.
மிகச்சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் இந்தியாவுக்கும் சிக்கல்
தான்.