Share via:
சென்னையில் ஃபார்முலா
4 கார் ரேஸ் நடத்தியே தீரவேண்டும் என்று அமைச்சர் உதயநிதி தீவிரம் காட்டி வருகிறார்.
கடந்த ஆண்டு நடத்த இருந்த ரேஸ் பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு இம்மாதம் நடைபெற
உள்ளது.
இந்த நிலையில் இந்த
ரேஸ் கார் பந்தயம் விதிமுறை மீறி நடத்தப்படுகிறது என்பதால் இதற்கு தடை விதிக்க வேண்டும்
என்று உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க. வழக்கு தொடுத்துள்ளது. இதனை அவசர வழக்காக பட்டியலிட
வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் கார் பந்தயத்துக்கு சிக்கல்
ஏற்படும் என்றே தெரிகிறது.
இந்த கார் ரேஸ் அவசியம்தானா
என்று நேற்று நாம் தமிழர் சீமான் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அவரது அறிக்கையில்,
‘ஊதியம் கேட்டு மருத்துவர்கள், செவிலியர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி
பேராசிரியர்கள், மக்களைத் தேடி மருத்துவ
ஊழியர்கள், போக்குவரத்துத்துறை ஊழியர்கள் எனப் பல்வேறு
தரப்பினர் வீதியில் இறங்கி போராடி
வருகின்றனர். அவர்களைப் பணிநிரந்தரம் செய்யாமல்,
பதவி உயர்வு தராமல் தொகுப்பூதியம்
கொடுக்கும் அளவிற்கே அரசின் நிதிநிலை
மிக மோசமாக உள்ள
நிலையில் ஆடம்பர மகிழுந்து பந்தயம்
தேவைதானா?
அரசு பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பை சீரமைக்கத்
தனியார் முதலாளிகளிடம் கையேந்தும் அளவிற்கு தமிழ்நாடு அரசு
தள்ளப்பட்டு நிதிநிலை மிக மோசமாக
உள்ள நிலையில் ஆடம்பர மகிழுந்து
பந்தயம் தேவைதானா? மாதம் ஆயிரம்
ரூபாய் கொடுத்தால்தான் வாழவே முடியும் என்ற
வறுமையான சூழலில் மக்களை வாட
வைத்துவிட்டு வீண் ஆடம்பர மகிழுந்து
பந்தயம் யாருடைய விருப்பத்திற்கிணங்க நடத்துகிறீர்கள்?
உங்கள் தனிப்பட்ட விருப்பத்திற்காக மகிழுந்து
பந்தயம் நடத்தினாலும், அதனை மக்கள் பயன்படுத்தும்
தீவுத்திடல், அண்ணா சாலையில் நடத்த
வேண்டிய அவசியம் என்ன வந்தது?
அதற்கென இருக்கும் இருங்காட்டுகோட்டை, சோழவரத்தில்
உள்ள பந்தயத் திடலில் நடத்தலாமே?
அதற்கான வசதி இல்லையென்றால், பந்தயக்
கட்டமைப்பைக்கூட எற்படுத்த திறனற்ற திராவிட
மாடல் அரசு எதற்கு மகிழுந்து
பந்தயம் நடத்த வேண்டும்? மக்கள்
பயணிக்கும் சாலையை மறித்து யாரை
மகிழ்விக்க இந்த மகிழுந்து பந்தயம்?
மகிழுந்து
பந்தயம் நடத்தியதால் தீர்ந்த மக்கள் பிரச்சனைகள்
எத்தனை? ஈர்த்த முதலீடு எவ்வளவு?
தமிழ்நாட்டுக்கு கிடைத்த வேலைவாய்ப்புகள் எத்தனை?
மகிழுந்து பந்தயம் நடத்துவதால் பாமர
மக்களின் பஞ்சம் பசி மாறிவிடுமா?
அல்லது மக்கள் தலைமேல் உள்ள
கடன்சுமைதான் கரைந்துவிடுமா? சென்னையின் முதன்மைச்சாலையில் மகிழுந்து பந்தயம் நடத்தி
மகிழ்வதற்காக மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் சின்னவர் உதயநிதி
ஸ்டாலின் அவர்கள் மக்களை வாட்டி
வதைப்பது என்ன நியாயம்?’’ என்று
கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் அ.தி.மு.க.
வழக்கு தொடர்ந்திருப்பதைப் பார்க்கும்போது, இந்த ரேஸ் மீண்டும் தள்ளிப் போகும் என்றே
தெரிகிறது.