Share via:
தங்களுடைய சித்தாந்த
எதிரி பா.ஜ.க.வினர் மட்டுமே என்று தி.மு.க. ஓங்கி அடித்துவருகிறது. அதேநேரம் பா.ஜ.க.
தலைவர்களை அழைத்து விழா நடத்துவதும், அந்த தலைவர்கள் கருணாநிதி சமாதிக்கு வரும் கேலிக்
கூத்துகளும் நடந்துவருகின்றன. இதன் உச்சகட்டத் திருப்பமாக உதயநிதிக்கு பா.ஜ.க. வரவேற்பு
கொடுத்திருப்பது அத்தனை எதிர்க்கட்சியினரையும் அலற விட்டுள்ளது.
பவளவிழா மாநாட்டை
மிகவும் சிறப்பாக நடத்திக் காட்டியிருக்கும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட
வேண்டும் என்று மாநாட்டில் மூத்த தலைவர்கள் பலரும் பேசினார்கள். குறிப்பாக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்
விருது பெறும் நேரத்தில், ‘முதல்வர் கையால் முதலமைச்சர்
ஸ்டாலின் விருது பெற்றதில் பெருமகிழ்ச்சி
அடைகிறேன். அதேபோல் காலம் தாழ்த்தாமல்
உதயநிதி அவர்களை துணை முதல்வராக்க
வேண்டும். கட்சிக்கும் ஆட்சிக்கும் அடுத்தது யார் கை
காட்ட வேண்டும்’’ என்று வெளிப்படையாக கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து எந்த
நேரமும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்ற சூழல் நிலவுகிறது. அதேநேரம்,
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்த பிறகு மாற்றம் செய்யலாம் என்ற கருத்தும் ஸ்டாலினுக்கு
இருக்கிறது.
இந்த நிலையில் உதயநிதிக்கு
துணை முதல்வர் வழங்கப்படுவதற்கு அ.தி.மு.க.வினரும் மற்ற எதிர்க்கட்சிகளும் கடுமையான
விமர்சனம் முன்வைக்கிறார்கள். அதேநேரம் பா.ஜ.க. இந்த விஷயத்தில் அமைதி காக்கிறது. இது
குறித்து பா.ஜ.க.வின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், ‘’உதயநிதி துணை முதல்வராக
வருவது அவர்கள் கட்சியில் எடுக்கப்படும் முடிவு. முதலமைச்சர் இயலாமை அதற்காக துணை முதல்வரை
கொண்டு வருகிறார்கள். இது ஜனநாயகம். உதயநிதி சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்வு
செய்யப்பட்டு அமைச்சராகவும் இருக்கிறார். அவர்கள் கட்சியில் முடிவெடுத்து உதயநிதியை
துணை முதல்வராக்குவது ஜனநாயகம். அதை பாஜக வரவேற்கிறது’’ என்று கூறியிருப்பது பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வாரிசு அரசியலுக்கு
எதிர்ப்பு என்பதெல்லாம் வெறும் நடிப்புதானா என்று பா.ஜ.க.வினரே அதிர்ந்து நிற்கிறார்கள்.