Share via:
முதல்வராக இருக்கும் ஸ்டாலின் இப்போது தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்களில்
பெரிதாக தலையிடுவது இல்லை. முக்கிய முடிவுகளை சபரீசனும் உதயநிதியுமே சேர்ந்து எடுத்துவருகிறார்கள்.
தி.மு.க.வில் அமைச்சர்கள் பதவிகளுக்கு இணையாக பார்க்கப்படும் மாவட்டச் செயலாளர்கள்
எண்ணிக்கையை 117 ஆக உயர்த்த திட்டமிட்டுக்கிறார்கள். இதற்காகவே உதயநிதி இப்போது இளைஞர்
அணி நிர்வாகிகளை சந்தித்துப் பேசுவதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து பேசும் உதயநிதி ஆதரவாளர்கள், ‘’இப்போது திருச்சி,
விழுப்புரம், வேலூர், தூத்துக்குடி, திண்டுக்கல் போன்ற பல மாவட்டங்களில் மூத்த கட்சித்
தலைவர்களின் ஆதிக்கம் அதிகரித்துவருகிறது. ஒட்டுமொத்தமாக அத்தனை மூத்த தலைவர்களின்
அதிகாரத்தையும் குறைக்க உதயநிதி திட்டமிட்டுள்ளார்.
தி.மு.க.வில் இப்போது 72 மாவட்டங்கள் உள்ளன. அதாவது மூன்று அல்லது
4 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியதாக இந்த மாவட்டங்கள் அமைகின்றன. இவர்களின் அதிகாரத்தைக்
குறைக்கும் வகையில் இந்த எண்ணிக்கையை 117 ஆக உயர்த்தும் திட்டம் இருக்கிறது.
அதாவது இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர்
என்று நியமிக்கப்போகிறார்கள்.. இதன் மூலம் பெரும்பாலான உதயநிதி ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு
கொடுக்கப்படும். அதோடு மூத்த தலைவர்களின் ஆதிக்கமும் குறைந்துவிடும்.
எனவே, இதற்கான பூர்வாங்க வேலைகள் முடிந்துவிட்டன. இப்படி செயல்பட்டால்
மட்டுமே 2026 தேர்தலை எளிதாக வெல்ல முடியும் என்று நினைக்கிறார்கள். இதனை உடனடியாக
நடைமுறைப்படுத்துவதா அல்லது இரண்டு கட்டமாக செயல்படுத்துவதா என்று யோசனை செய்யப்படுகிறது.
அதன்படி முதல் கட்டத்தில் தேர்தல் முடிவுகளைப் பொறுத்து மிகக்குறைந்த
வாக்குகள் பெற்றுக்கொடுத்த மாவட்டச் செயலாளர்களுக்கு கல்தா கொடுத்து அங்கெல்லாம் புதிய
ஆட்களை நியமனம் செய்துவிட்டு அதன்பிறகு அடுத்த கட்டத்தில் மற்றவர்களை நியமனம் செய்யப்போகிறார்கள்.
புதிய ஆட்கள் எல்லோருமே முழுக்க முழுக்க உதயநிதியின் ஆதரவாளர்கள், இளைஞர் அணி ஆட்கள்
மட்டுமே’’ என்றார்கள்.
இந்த விவகாரம் தி.மு.க. கூடாரத்தை கலவரப்படுத்திவருகிறது.