எக்கச்சக்க இடையூறுகளுக்கு நடுவில் ஒரு வழியாக கார் பந்தயத்தைத் தொடங்கிவைத்து, பெருமூச்சு விட்டிருக்கிறார் உதயநிதி. இந்த பந்தயத்துக்கு திடீரென திரைப்படக் கலைஞர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுக்குமாறு நிர்ப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், நடிகர் விஜய் எந்த விமர்சனமும் செய்யாமல் இருந்ததற்கு காரணம் தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயத்துக்காக 3.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சர்க்யூட் தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர்பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் அண்ணா சாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளது. இது தெற்கு ஆசியாவிலேயே மிக நீளமான சாலை சர்க்யூட் என்பது குறிப்பிடத்தக்கது.

கார் பந்தய பயிற்சியை பிற்பகல் 2.45 மணி அளவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக தொழில்நுட்ப ரீதியாக திட்டமிட்டபடி பயிற்சி பந்தயங்களை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க., எதிர்க்கட்சி அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் நாம் தமிழர்கள் இணைந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து தொடர்ந்து எதிர்ப்பு காட்டி வந்தனர். போட்டி நடைபெறக் கூடாது என்பதற்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்தார்கள்.

இவர்களுடய எதிர்ப்புகளுக்கு வலு சேர்ப்பது போன்று  சர்வதேச மோட்டார் கூட்டமைப்பு (எஃப்ஐஏ), சென்னை பந்தயத்துக்கான அனுமதி சான்றிதழை வழங்குவதில் சுணக்கம் காட்டியது. இதற்கு நேற்றுமுன்தினம் இரவு பெய்த மழை காரணமாக கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென சினிமா கலைஞர்கள் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், சிவகார்த்திகேயன், கார்த்தி, ஆர்யா என்று பலரும் கார் பந்தயத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள். உதயநிதியின் டீம் கேட்டுக்கொண்டதாலே இவர்கள் அனைவரும் இப்படி வரிசையாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் விஜய் என்ன சொல்லப்போகிறார் என்பது கடும் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், கடைசி வரையிலும் விஜய் ஆதரவாகவும் பேசவில்லை, எதிர்ப்பாகவும் பேசவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, ‘இன்னமும் மாநாட்டுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்பதுடன் கோட் படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது’ என்பதாலே அமைதியாக இருந்துவிட்டாராம்.

நீதிமன்றம் தரப்பில் இரு முறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மாலையில் 5.30 மணி அளவில் போட்டியை நடத்துவதற்கான சான்றிதழை எஃப்ஐஏ வழங்கியது. இதைத் தொடர்ந்து இரவு 7 மணி அளவில் ஃபார்முலா 4 கார்பந்தயத்தின் பயிற்சியை அமைச்சர் உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பயிற்சியில் சுமார் 10 கார்கள் மின்னல் வேகத்தில் பறந்தன. சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் சென்ற இந்த கார்களை பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர். முன்னதாக சாகசகார் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் இரு கார்கள் இரு பக்கவாட்டு சக்கரங்கள் மட்டுமே தரையில் இருந்தபடி அதிவேகத்தில் சென்றதை கண்டு ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

இன்றைய போட்டியில் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப், இந்தியன் ரேசிங் லீக் (ஐஆர்எல்) பந்தயம், ஜேகே டயர் ஜூனியர் தேசிய போட்டி ஆகியவை நடைபெறுகிறது. பிற்பகலில் தொடங்கும் பிரதான பந்தயங்கள் இரவு 10.30 மணிக்கு நிறைவடைகிறது.

ஃபார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயம் தனி நபராகவும், இந்தியன் ரேசிங் லீக் அணியாகவும் நடத்தப்படுகிறது. ஃபார்முலா 4 பந்தயத்தில் சென்னை டர்போ ரைடர்ஸ், கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங், ஸ்பீடு டெமான்ஸ் டெல்லி, பெங்களூரு ஸ்டெஸ்டர்ஸ், ஷ்ராச்சி ராஹ் பெங்கால் டைகர்ஸ், ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ், அகமதாபாத் ரேசர்ஸ், காட்ஸ்பீடு கொச்சி ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒரு அணிக்கு 2 வீரர்கள் வீதம் 16 பேர் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு அணியிலும் 2 கார்கள் பயன்படுத்தப்படும்.

இந்தியன் ரேசிங் லீக் பந்தயத்தில் (ஐஆர்எல்) 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒரு அணியில் 4 பேர் இடம் பெறுவார்கள். அந்த வகையில் 18 வீரர்கள், 6 வீராங்கனைகள் என மொத்தம் 24 பேர் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு அணியும் 2 கார்கள் வீதம் 12 கார்களை பயன்படுத்தும்.

சென்னை டர்போ அணியில் இந்திய வீரர்களான சந்தீப் குமார், முகமது ரியான்,இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் லான்கேஸ்டர், வெளிநாட்டைச் சேர்ந்த வீராங்கனை எமிலி இடம் பெற்றுள்ளனர். போர்ச்சுகல், செக் குடியரசு, பெல்ஜியம், டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த போட்டியின் முதல் சுற்று கடந்த 24 மற்றும் 25-ம் தேதிகளில் சென்னையை அடுத்த இருங்காட்டு கோட்டையில் நடைபெற்றது. தற்போது சென்னையில் நாளை நடைபெறுவது 2வது சுற்று போட்டியாகும். 3-வது சுற்று போட்டி கோவையில் வரும் 13 முதல் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. 4வது மற்றும் 5வது சுற்றுகள் அக்டோபர், நவம்பரில் கோவா, கொல்கத்தாவில் நடத்தப்படுகிறது.

எப்படியோ, கடுமையான இடையூறுகளை வென்று போட்டியை நடத்திக் காட்டிவிட்டார் உதயநிதி என்று உடன்பிறப்புகள் கொண்டாடி வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link