Share via:
இன்று சென்னையில் பிரசாரம் செய்துவருகிறார் அதிமுக பொதுச்செயலாளர்
எடப்பாடி பழனிசாமி. இன்றைய தினம் உதயநிதியை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
இன்று இபிஎஸ், ‘’அதிமுக ஜனநாயகமுள்ள கட்சி. சாதாரண கிளைச் செயலாளர்
கூட பொதுச்செயலாளர் ஆக முடியும், திமுகவில் வரமுடியுமா? எனக்குப் பின்னாலும் அதிமுக
நூறாண்டுகள் தொடரும் என்று அம்மா சொன்னார், இப்போது எனக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கிறீர்கள்,
எனக்குப் பின் ரவி வருவார், இங்குள்ள யாராவது வருவார்கள், இப்படி வாய் திறந்து ஸ்டாலினால்
சொல்ல முடியுமா? குடும்பமாக இருக்கும் கட்சி அதிமுக. தொண்டர்கள் நிறைந்த கட்சி.
பி டீம் உருவாக்கினார்கள், யார் என்று எல்லோருக்கும் தெரியும்.
இன்று பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. நான் ஏற்கனவே சொல்லிக்கொண்டு இருந்தேன், இவர்
சரியில்லை, எட்டப்பனாக இருக்கிறார் என்றேன். அது, நிரூபணமாகிவிட்டது. கட்சிக்கு இப்படிப்பட்ட
நபர் தேவையா..? அடையாளம் காட்டப்பட்டு தானாக வெளியேறிவிட்டனர், அதிமுக இன்று ஜெட் வேகத்தில்
போகிறது.
நான் பெரும்பான்மை நிரூபிக்கும்போது திமுகவினர் சபாநாயகர் இருக்கையில்
அமர்ந்து டான்ஸ் ஆடினார்கள். அந்த மாமன்றத்தில் கேவலமாக நடந்த கட்சி. பெரும்பான்மை
நிரூபித்த பின்னர் சட்டையை கிழித்துக்கொண்டு வீதியில் சென்றார் ஸ்டாலின். இப்போது அதிமுக
பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைக்கும் அப்போது வீதியில் எப்படி போகப்போகிறார் என்று
நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
இன்னொருவர் ஜங்குஜங்கு என்று குதிக்கிறார், எடப்பாடி பழனிசாமி
காலைத் தேடிக்கொண்டிருக்கிறார் என்கிறார். எங்களுக்கு உதவி செய்தவர்களிடம் ஆசி வாங்குவது
எங்கள் பண்பு. அதிமுகவின் பண்பு. அந்த பண்பில்லாத குடும்பத்தில் பிறந்தவர் தானே உதயநிதி.
நீங்கள் யார் யார் காலைப் பிடித்தீர்கள் என்பது தெரியும், சொன்னால் வெட்கக்கேடு. இரவு
2 மணிக்கு யார் காலைத் தேடி இன்ஸ்டாகிராமில் ரீபோஸ்ட் பண்ணினார் என்பது தெரியும். ஏற்கனவே
இப்படி இருந்ததால் தான் பால்டாயில் குடித்தார், பால்டாயில் குடித்ததெல்லாம் பஞ்ச் டயலாக்
பேசுகிறது, இன்னொரு முறை பால்டாயில் குடித்தால் பாடி தாங்காது, எச்சரிக்கையாக பேசுங்கள்.
என்னுடைய அனுபவம் தான் அவரது வயது. ஆனால் நிறைய நன்மை செய்தாராம், குடும்பத்துக்கு
பணம் சேர்த்ததைத் தவிர வேறு என்ன நன்மை செய்தார்? ஜெயிலுக்குப் போனாரா…? புதிய திட்டத்தை
நிறைவேற்றினாரா? கார் பந்தயம் நடத்தினார். நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து இடையூறு
ஏற்படுத்தி பல நூறு கோடியில் நடத்தினார். காலுக்குச் செருப்பு இல்லாமல் ஏழைகள் உள்ளனர்.
அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை, செல்வச் செழிப்பில் வாழ்ந்தவர்கள். நாமெல்லாம் கிராமத்தில்
பிறந்து ஏழைகளோடு பழகி கஷ்டம் நஷ்டம் அனுபவித்து, அதில் மக்களை மீட்டெடுக்க
என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்கும் கட்சி அதிமுக.
பேனா வைக்கிறார், எழுதாத பேனாவை நடுக்கடலில் ஏன் வைக்கிறீர்கள்…?
82 கோடி ரூபாய். அதை நினைவிடத்தில் வையுங்கள் அல்லது உங்கள் அப்பா நினைவாக அரசு பள்ளி
மாணவர்களுக்கு எழுதும் பேனா கொடுங்கள். ஊதாரிச்செலவு செய்வதில் அப்பாவும் மகனும் அடிக்கும்
கூத்து கொஞ்சநஞ்சமல்ல. இதற்கு முடிவு கட்டுவீர்களா..? என்னமோ உதயநிதி நாட்டை பிடித்தமாதிரி
அப்பாவும் மகனும் பேசுகிறார்கள்.
கருணாநிதி அடையாளத்தினால் தான் முதல்வர், துணை முதல்வர், அந்த
குடும்பத்தில் பிறக்கவிலை என்றால் கவுன்சிலர் கூட ஆகமுடியாது. கவுன்சிலராவது சாதாரண
விஷயமல்ல, மக்கள் நன்மதிப்பை பெறவேண்டும்.
முத்துவேல் கருணாநிதி மகன் ஸ்டாலின் என்று சொன்னால் தான் தெரியும்,
தனியாகச் சொன்னால் தெரியாது, தனி திறமையில்லை. நாம் அப்படியில்லை, தலைவரை நேசித்தோம்,
கட்சிக்கு விசுவாசமாக இருந்தோம், மக்களின் நன்மதிப்பு, மக்கள் அங்கீகாரம் கொடுத்தனர்.
இப்போது இன்பநிதி வந்துவிட்டார். இது என்ன அரச பரம்பரையா? கட்சியில்
வருவது உங்கள் விருப்பம், ஆட்சியில் வருவதை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? அமைச்சர் ஒருவர்
இன்பநிதி வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார்.
எப்போதும் அவருக்குப் பதவி தான் முக்கியம்.
அந்த கட்சியில் பாதி பேர் அதிமுகதான். 8 அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஏனென்றால் திமுகவில்
ஆளில்லை. யாரையெல்லாம் கட்சியிலிருந்து நீக்கினோமோ, அவர்கள் அங்கே போய் அடைக்கலமாகி
மந்திரியாகிவிட்டனர். செல்லாத ஓட்டுக்கு வேல்யூ உண்டா? நாம் செல்லாத ஓட்டு என்று தூக்கியெறிந்தவர்களை
அங்கே தூக்கி வைத்துள்ளனர். இப்போது 19 அதிமுகவினர் திமுகவில் எம்.எல்.ஏ வேட்பாளர்களாக
நிற்கிறார்கள். ஏனென்றால்
அங்கே ஆளில்லை. அதனால் அதிமுகவில் ஒதுக்கப்பட்டவர்கள் சீட் வாங்கி நிற்கிறார்கள். கழுதை
தேய்ந்து கட்டெறும்பு ஆகிவிட்டது…’’ என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
என்ன பதில் சொல்லப்போகிறார் உதயநிதி..?