Share via:
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து
மாலை 5.44 மணியளவில் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஷார்ஜாவுக்கு புறப்பட்டது. விமானத்தில்
6 குழந்தைகள் உட்பட 141 பயணிகள் இருந்தனர். விமானத்தில் ஏற்பட்ட ஹைட்ராலிக் பிரச்னை
காரணமாக விமானம் மேலே ஏறியதும் உள்ளே செல்லவேண்டிய சக்கரங்கள் செல்லவில்லை. அதேநேரம்,
அதிக அளவு எரிபொருள் இருக்கும் நேரத்தில் உடனடியாக கீழே இறங்குவதும் ஆபத்தாக முடியலாம்
என்பதால் வானில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக புதுக்கோட்டை கீரனூர், விராலிமலை பகுதிகளில்
வட்டமடித்தது.
அதற்குள் தொழில்நுட்பக் கோளாறு காரணமான பிரச்னை என்றும் வானில்
விமானம் வட்டமடிப்பதையும் கண்ட பொதுமக்கள் மனம் பதைபதைக்க வானத்தைப் பார்த்தபடியே இருந்தார்கள்.
தொழில்நுட்பக் கோளாறு என்றதுமே நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு, 20க்கும் மேற்பட்ட
ஆம்புலன்ஸ்களும் தீயணைப்பு வண்டிகளும் உதவுவதற்கு வசதியாக மருத்துவர் குழுவும் நிறுத்தப்பட
விமான நிலையத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
விமானத்திற்குள் இருந்த பயணிகளுக்கு முழு விபரமும் தெரிவிக்கப்படவில்லை
என்றாலும் மிகப்பெரிய பிரச்னை என்று நினைத்து அதிர்ச்சியில் மூழ்கியிருக்கிறார்கள்.
பெரும்பாலோர் உயிர் பயத்தில் நடுங்கிவிட்டார்கள். அதனாலே அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
அடுத்த விமானத்தில் பயணிக்காமல் பாதிக்கும் மேற்பட்டோர் பயணத்தைக் கேன்சல் செய்துவிட்டார்கள்.
அடுத்த இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்த விமானத்தை
8.15 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்க தீர்மானிக்கப்பட்டது. திட்டமிட்டப்படியே,
விமானம் சரியாக 8.10 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை மீண்டும் நெருங்கியது. மெல்லமெல்ல
உயரத்தைக் குறைத்த அந்த விமானம் சரியாக 8.15 மணிக்கு திட்டமிட்டபடி ஓடுபாதையைத் தொட்டது.
அதன் சக்கரங்கள் ஓடுபாதையை உரசியபடி பாதுகாப்பாக விமானம் தரையிறங்கியது. இதனால், திருச்சி
விமான நிலையத்தில் சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்த பரபரப்பும் பதற்றமும் தணிந்தது.
இந்த விவகாரம் குறித்துப் பேசும் தொழில்நுட்ப நிபுணர்கள், ‘’விமானம்
‘டேக் ஆஃப்’ ஆக ஆரம்பித்ததும் சக்கரங்கள் உள்ளே செல்லவேண்டும். இது சில நிமிடங்களில்
நடந்து விடும். சக்கரங்கள் உள்ளே செல்லாதபட்சத்தில் விமானத்தை இயக்காமல் கீழே மீண்டும்
இறக்கி விட வேண்டும். ஆனால் விமானத்தை ‘டேக் ஆஃப்’ செய்யும்போது இருக்கும் விமான எடையுடன்
கீழே இறக்க முடியாது. அதனால் எரிபொருள் எடையைக் குறைக்க வேண்டும். ஒரு சில பெரிய ரக
விமானங்களில் எரிபொருளை வெளியில் விட்டு, காற்றில் ஆவியாக்குவதற்கான சிறப்பு தொழில்
நுட்பம் இருக்கும். சிறிய விமானங்களில் அத்தகைய வசதிகள் கிடையாது.
திருச்சியிலிருந்து சார்ஜா 1500 ‘நாட்டிக்கல் மைல்’ (2800 கி.மீ.,)
இருக்கும் என்பதால், முழுமையாக எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கும். ஷார்ஜாவுக்கு நான்கு
மணி நேரம் விமானம் செல்லும். ஆனால் அவ்வளவு நேரம் பறக்கவோ, எரிபொருளைக் குறைக்கவோ
தேவையில்லை. கொஞ்சம் எரிபொருளைக் குறைத்து விட்டாலும் போதும். எனவே இரண்டு மணி நேரங்களுக்குப்
பறந்ததும் விமானம் கீழே இறக்கப்பட்டுள்ளது. நல்ல வேளையாக சக்கரங்களில் மீண்டும் பிரச்னை
இல்லை என்பதால் அனைவரது உயிரும் காப்பாற்றப்பட்டுள்ளது’’ என்கிறார்கள்.
பெரும் சிக்கல்களுக்கு மத்தியில், விமானத்தை தரையிறக்கிய இந்தோனேஷியாவைச்
சேர்ந்த விமானிகள் இக்ராம் ரிஃபாட்லி ஃபஹ்மி ஜைனல் மற்றும் துணை விமானி மித்ராய் ஸ்ரீ
கிருஷ்ணா ஷீடல் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிகின்றன.