Share via:
எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை
என்று ஒவ்வொரு கூட்டத்திலும் சர்க்கரையாகப் பேசுகிறார் டிடிவி தினகரன். ஆனால், சித்தி
சசிகலாவை சந்தித்த ஒரு நிர்வாகியை கட்சியை விட்டே நீக்கியிருக்கிறார் தினகரன். இதையடுத்து
என்னப்பா நடக்குது என்று புரியாமல் முக்குலத்தோர் தடுமாறுகிறார்கள்.
சித்தி என்று பத்திரிகையாளர்களிடம் பாசமாகப் பேசும் தினகரன், நிஜத்தில்
எலியும் பூனையுமாக மோதிக்கொண்டு இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி குரு பூஜையில் கலந்து
கொள்ள சசிகலா வந்த போது, அங்கிருந்து டிடிவி தினகரன் திடீரென ஆஃப்சன்ட் ஆனார். அதேபோல்
அண்ணா நினைவு நாளில் சென்னை மெரினா கடற்கரையில் சசிகலாவின் கார் வருவதைப் பார்த்தவுடனே
டிடிவி தினகரன் பேச்சை நிறுத்திவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பன்னீருக்கும் சசிகலாவுக்கும் இடமில்லை
என எடப்பாடி பழனிசாமி உறுதிபடக் கூறிவிட்டார். இந்நிலையில் தனக்கு தனி ஆதரவாளர் வட்டத்தை
உருவாக்க சசிகலா முயற்சி எடுக்கிறார்.
இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள சசிகலாவின் வீட்டில்
நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமமுக மாணவர் அணி செயலாளராக இருந்த ஜீவிதா நாச்சியார் கலந்து
கொண்டார். மதுரையில் அமமுகவின் முகமாக அறியப்படும் ஜீவிதா நாச்சியார், சசிகலாவின் ஆலோசனைக்
கூட்டத்தில் கலந்து கொண்டது டிடிவி தினகரனையும், அமமுகவினரையும் கடும் அதிருப்தியில்
ஆழ்த்தியதாக கூறப்படுகிறது. இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றும் விதமாக ஜீவிதா
நாச்சியாரை கட்சியில் இருந்தும் நீக்கி டிடிவி தினகரன் நடவடிக்கை எடுத்தார்.
தினகரன் வெளியிட்ட அறிக்கையில், ‘’கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும்,
முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாக ஏற்படும் வகையில் நடந்து
கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும்
விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக மாணவியர் அணி செயலாளர் ஜீவிதா நாச்சியார்
அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும்
இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத்
தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது’’ எனக் கேட்டுள்ளார்
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது சமூக வலைதள பக்கத்தில்
“துரோகம் வேர் அறுக்கப்படும்” என ஜீவிதா நாச்சியார் பதிவிட்டுள்ளார். ஆக,
சசிகலாவுடன் ஒற்றுமையாக முடியாத டிடிவி.தினகரன் ஒற்றுமை பற்றி பேசலாமா என்று கேட்கிறார்கள்.
நியாயமான கேள்வி.
