Share via:

“கடந்த 48 மணி நேரமாக அமெரிக்கா முன்னின்று நடத்திய பேச்சு
வார்த்தையின் விளைவாக சண்டை நிறுத்தம் செய்யப்படுகிறது” என்று அமெரிக்க அதிபர்
வெளியிட்ட அறிவிப்பு இந்தியா முழுக்க அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா அமைதி
காக்கும் நிலையில் பாகிஸ்தான் அதிபர் தனது X தளப் பதிவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,
துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அரசுச் செயலாளர் ஆகியோருக்கு நன்றி கூறியிருக்கிறார்.
போர் நிறுத்த அறிவிப்புக்கு பிறகும் தொடர்ச்சியாக எல்லையில் பல
பகுதிகளில் தாக்குதல் நடப்பதாக தகவல் வெளியாகின்றன. இதையடுத்து போரை நிறுத்தும் அதிகாரம்
பாகிஸ்தான் அரசுக்கு இல்லையோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், இந்திய விமானப்படை தளங்கள், எஸ்-400 ஏவுகணை யூனிட்
இருக்கும் தளம் ஆகியவற்றை அழித்தாக பாகிஸ்தான் கூறுவது முற்றிலும் பொய் என வெளியுறவுத்துறை
செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியிருக்கிறார். அவரது பேட்டியில், ‘’சிர்சா மற்றும் சூரத்
விமானப்படை தளங்கள், ஆதம்பூரில் உள்ள எஸ்-400 ஏவுகணை தளம் ஆகியவற்றை அழித்ததாக பாகிஸ்தான்
கூறுவது முற்றிலும் பொய். இந்தியாவின் முக்கியமான கட்டிடங்கள், மின் நிலையங்கள் மீது
தாக்குதல் நடத்தப்பட்டு அழிக்கப்பட்டதாக பாகிஸ்தான் கூறுவதும் பொய். மக்கள் இடையே பிரிவினையை
ஏற்படுத்தவும் பாகிஸ்தான் முயற்சிக்கிறது. அமிர்தசரஸ், ஆப்கானிஸ்தான் மீதும் இந்தியா
குண்டுகள் வீசியதாக பாகிஸ்தான் பொய் தகவலை கூறிவருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்தியா தொடர்ந்து தாக்குதல் நடத்துமா அல்லது அமைதி
காக்குமா என்பது புரியவில்லை. இந்நிலையில், இந்த போர் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில்
தோல்வி என்றே கூறப்படுகிறது. ஏனென்றால், பாகிஸ்தானுக்கு IMF 2 பில்லியன் டாலர் நிதி
உதவி செய்கிறது. எந்த நாடும் இந்தியாவுக்கு ஆதரவாக நின்று இதை எதிர்க்கவில்லை. போர்
நிறுத்தத்தை இந்தியாவுக்கு முன்னதாக அமெரிக்கா அறிவிக்கிறது. இதன் பிறகும் பாகிஸ்தான்
தாக்குதல் நடத்துகிறது. பஹல்காம் தீவிரவாதிகள் யாரும் பிடிக்கப்படவில்லை. ஆகவே, இந்த
போர் உலக நாடுகள் இடையில் இந்தியாவின் மதிப்பை குறைக்கவே செய்திருக்கிறது.
பிரதமர் மோடியின் ராஜதந்திரம் ஒட்டுமொத்தமாகத் தோல்வி அடைந்துவிட்டதாகவே
தெரிகிறது.