Share via:
நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தமிழக பாஜக
மாநில மையக்குழு கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில்
நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அண்ணாமலை ஆதரவாளர் ஒருவரும் எதிர்ப்பாளர் ஒருவரும்
கட்டம் கட்டப்பட்டுள்ளனர்.
இந்த மையக்குழுக் கூட்டத்தில் பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர்
ரெட்டி, தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்,
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், மகளிர் அணி தேசிய
தலைவர் வானதி சீனிவாசன், மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, பாஜக சட்டப்பேரவை
தலைவர் நயினார் நாகேந்திரன், கே.பி.ராமலிங்கம், ராம சீனிவாசன் உட்பட முக்கிய தலைவர்கள்
பலர் கலந்து கொண்டனர்.
சுமார் 6 மணிநேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழிசை செளந்தர்ராஜன்,
நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் நேரடியாக அண்ணாமலை மீது புகார் கூறியிருக்கிறார்கள்.
தன்னைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிவரும் திருச்சி சூர்யாவை கட்சியில் இருந்து
நீக்க வேண்டும் என்று தமிழிசை பேசியிருக்கிறார்.
உடனடியாக அ.தி.முக. ஆதரவாளரான முருகானந்தம், ‘உங்கள் தூண்டுதலில்
கல்யாணராமன் தொடர்ந்து அண்ணாமலையை விமர்சனம் செய்கிறார்’ என்று குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.
இதையடுத்து இரண்டு தரப்புக்கும் மோதல் நடந்திருக்கிறது.
வேறு வழியில்லாமல் இரண்டு பக்கத்தினரின் கோரிக்கையையும் நிறைவேற்றும்
வகையில் கல்யாணராமன், திருச்சி சூர்யா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்து
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீக்கம் குறித்து கல்யாணராமன், ‘இன்று என்னை கட்சியை விட்டு
நீக்கியுள்ளதாக தரப்பட்டுள்ள அறிவிக்கை துரதிர்ஷ்டவசமானது. மாநில தலைவர் அண்ணாமலை திமுகவுடன்
ரகசிய உறவை உருவாக்கி அதிமுக-பாஜக கூட்டணியை முறித்ததாக சொல்லப்படுவதே எனது அடிப்படை
குற்றச்சாட்டு.
அது குறித்து அண்ணாமலையின் தலைமையின் கீழ் செயல்படும் நிர்வாகிகள்
முடிவெடுக்க முடியாது என்பது அடிப்படை நீதி. It is against the principles of
natural Justice. ஆங்கிலத்தில் “No one can be a judge in his own
cause” என்று ஒரு பார்வை உண்டு. இந்த பார்வையை மீறுகிறோம் என்ற அடிப்படை விஷயம்
கூட சம்பந்தப்பட்ட நபர்கள் அறியவில்லை என்பது பரிதாபம்.
இந்த அடிப்படை நீதியை மீறும் செயல் கண்டனத்திற்குரியது. இது குறித்து
பாஜக மத்திய தலைமையிடம் எனது கருத்துக்களை பகிர்ந்துள்ளேன். மற்றபடி சமூக-தேசிய நலனிற்காக
தொடர்ந்து பணியாற்றுவதே மாகாளி-பராசக்தியின் ஆணை. அது தொடரும்…!’ என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரம், திருச்சி சூர்யா இது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
அதெல்லாம் ஒரு மாசத்துல திரும்பவும் கட்சிக்குள்ள வந்திடுவார் என்கிறார்கள்.