News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது என்றாலும், அதை மீறி எங்கு திரும்பினாலும் விஜய் வாழ்த்து போஸ்டர்களே அதகளம் செய்கின்றன. இந்நிலையில் விஜய்க்கு முதல் ஆளாக வாழ்த்து கூறியிருக்கிறார் நாம் தமிழர் சீமான். காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை, பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் வாழ்த்துசொல்லி இருக்கிறார்கள்.

சீமான் ஆட்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையில் கடுமையான சண்டை போய்க்கொண்டிருக்கும் நிலையில் சீமான் வெளியிட்டுள்ள பதிவில், ‘’தனித்துவமிக்க நடிப்பு, ஈர்க்கும்படியான நடனம், ரசிக்கத்தக்க நகைச்சுவை, கதாபாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு, உயிரோட்டமாகப் பிரதிபலிக்கும் திறன் என எல்லா ஆற்றல்களையும் வளர்த்துக்கொண்டு மக்களை மகிழ்வித்து, தமிழ்த்திரைத்துறையில் உச்சம் தொட்ட ஆகச்சிறந்த திரைக்கலைஞன்! தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்’’ என்று தெரிவித்திருக்கிறார். இதையடுத்து ரசிகர்களின் போராட்டம் முடிவுக்கு வரலாம் என்கிறார்கள்.

நேற்று முதலே டிரெண்டிங்கில் விஜய் பிறந்த நாள் பட்டையைக் கிளப்புகிறது. இந்நிலையில் விஜய் பற்றிய சுருக்கமான குறிப்பு இங்கு.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், பாடகி ஷோபா தம்பதிக்கு மகனாக சென்னையில் ஜூன் 22-ம் தேதி 1974-ம் வருடம் பிறந்தவர் ஜோசஃப் விஜய் எனப்படும் விஜய். எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய வெற்றி, நான் சிவப்பு மனிதன், சட்டம் ஒரு விளையாட்டு போன்ற படங்களில் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். ஷோபா திரைக்கதை எழுத, அப்பா சந்திரசேகரனின் இயக்கத்தில் “நாளைய தீர்ப்பு” படத்தின் நாயகனாக அறிமுகம் ஆனார். விஜயகாந்துடன் இணைத்து அவர் இயக்கிய ‘செந்தூரப்பாண்டி’ திரைப்படம் விஜய்யை பட்டிதொட்டியெங்கும் கொண்டுசென்றது.

ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்த விஜய் ‘பூவே உனக்காக’ படத்தின் மூலம் குடும்பத்தின் அத்தனை ரசிகர்களையும் கவரத் தொடங்கினார். இதையடுத்து வெளியான லவ் டுடேயும் மக்களை கவர்ந்தது.

ஃபாசில் இயக்கத்தில் வெளிவந்த காதலுக்கு மரியாதை, விஜய்யை தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஹீரோவாக மாற்றியது.  இந்த நிலையில் ரசிகையாக வந்து அறிமுகமான காதலி சங்கீதாவை 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று திருமணம் செய்துகொண்டார்.

காதல் நாயகனாகவே வலம் வந்து கொண்டிருந்த விஜய்யை திருமலை படம் ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியதோடு, பஞ்ச் டயலாக் பேசவும் வைத்தது. 2005ஆம் ஆண்டு வெளியான `கில்லி` திரைப்படம் விஜய்யின் வாழ்க்கையை அடியோடு மாற்றியது. விஜய் என்ன சாகசம் செய்தாலும் நம்பும் அளவுக்கு ரசிகர்கள் கிடைத்தார்கள், அந்த ரசிகர்கள் பலத்தை தன்னுடைய பலமாக் மாற்றிக்கொண்டு நம்பர் ஒன் நடிகராக தொடர்ந்து இயங்கி வருகிறார் விஜய்.

இப்போது அரசியலிலும் குதித்து அதகளம் செய்கிறார். யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து நின்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே விஜய் ஆசையாக இருக்கிறது. விஜய் பிறந்த நாளில் அவரது ஆசை நிறைவேறட்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link