மாமல்லபுரம் அருகில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த 5 பெண்கள், கார் மோதி தூக்கி வீசப்பட்டதில் பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

மாமல்லபுரம் அருகே பண்டிதமேடு ஈ.சி.ஆர். பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் பெண்கள் கூட்டம் கூட்டமாக மாடு மேய்த்து செல்வது வழக்கம். அதன்படி இன்று (நவம்பர் 27) மதியம் 5 பெண்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஈ.சி.ஆர். சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, சாலையோரம் அமர்ந்தபடி மாடு மேய்த்துக் கொண்டிருந்த 5 பெண்கள் மீது பலமாக மோதியது.

 

கார் மோதிய வேகத்தில் 5 பெண்களும் வெவ்வேறு இடங்களில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். பெண்களின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள், விபத்தை ஏற்படுத்திய காரை வளைத்து பிடித்து அதில் இருந்த 2 பேரை காரைவிட்டு வெளியேற்றினர். அதன் பின்னர் கோபத்தில் இருந்த மக்கள் அந்த 2பேரையும் அடித்து துவைத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தை ஏற்படுத்திய 2 பேரை பொதுமக்களிடம் இருந்து மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

முதல்கட்ட விசாரணையில் காரில் சென்ற 2 பேரும் மதுபோதையில் இருந்ததாகவும், போதையில் நிதானம் தவறி விபத்தை ஏற்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link