Share via:
போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போதைப் பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க இரும்புக்கரம் கொண்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுக்கவும் அதன் விற்பனைக்கு எதிராகவும் தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
அதன்படி கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்டு 10ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போதைப்பொருள தொடர்பான மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளின் முதல் மாநில அளவிலான மாநாடு மைல் கல் ஆகும்.
மாநிலம் முழுவதும் கஞ்சா சாகுபடி முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. அதோடு ஆந்திராவில் இருந்து கொண்டு கஞ்சா கொண்டு வருவதை தடுக்க ஆபரேஷன் பரிவர்தன் என்ற சிறப்பு திட்ட நடவடிக்கை கடந்த 2021ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இதில் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 6ஆயிரத்து 416 ஏக்கர் பரப்பளவில் வளர்க்கப்பட்ட கஞ்சா அழிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டில் என்.டி.பி.எஸ். சட்டத்தின் கீழ் மொத்தம் 10ஆயிரத்து 665 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டான 2024 ஆகஸ்டு வரை 9750 குற்றவாளிகள் மீது 6053 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளின் வாயிலாக 15 ஆயிரத்து 92 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மோசமான மற்றும் வழக்கமான குற்றவாளிகள் அடிப்படையில் 2022ல் 645 குற்றவாளிகளும், 2023ம் ஆண்டு 504 குற்றவாளிகளும் நடப்பாண்டில் 533 குற்றவாளிகளும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருட்களை கொண்டு சென்ற 2407 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா மற்றும் தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருந்தகங்களில் முறையான மருந்து சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் விற்பனை செய்து கைது செய்யப்பட்டவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அதன்படி 77 குற்றவாளிகளின் 45 அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மீது நிதி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் 18 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வங்கிக்கணக்கும் அடங்கும்.
80 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும் கல்வி நிறுவனங்களில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதைக்கு எதிரான குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை மேம்படுத்த 1 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருட்களுக்கு எதிராக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் தேதி சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக அறிவித்து பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறது.
தமிழக அரசின் டிரைவ் அகெய்ன்ஸ்ட் ட்ரக்ஸ் சிறந்த முயற்சிக்காக ஸ்கோச் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கப்பிரிவு தலைமையகத்தில் உள்ள மத்திய புலனாய்வு பிரிவு கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லா உதவி தொலைபேசி எண்ணாக 10581ஐ 24 மணி நேரமும் இயங்கும் வகையில் தமிழக அரசு வழங்கியுள்ளது. இதுவரை 1633 அழைப்புகள் பெறப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 865 அழைப்புகள் ஆதாரமற்றவை என்று தெரியவந்துள்ளது.
மாநில அளவிலான போதை பொருட்களுக்கு எதிரான ஒருங்கிணைப்புகுழுக் கூட்டங்கள் 6 மாத காலத்திற்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, கூடுதல் தலைமை செயலரால் காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் படைத்தலைவர், தமிழ்நாடு சட்ட அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் அதிகாரிகளுடன் தொடர்ந்து பல்வேறு ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, போதைப்பொருள் உற்பத்தி, சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு பிரத்யேகமான பதக்கத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். அதற்கான காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் சுழல்நிதியில் இருந்து 50 லட்சத்தை என்.டி.ப்பி.எஸ். சட்டத்தின்படி பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் இருந்து காவல்துறை அதிகாரிகளுக்கு வெகுமதி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
போதையில்லா தமிழகத்தை உறுதி செய்ய, மிஷன் மேனேஜ்மெண்ட் யூனிட்ட நிறுவமும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய அமலாக்க நடவடிக்கைகள் பற்றி தெரிந்து கொள்வோம்
ஆகஸ்டு 2024ல் மொத்தம் 641 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1148 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருள் பயன்பாட்டால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உளவுத்துறையின் தகவல் அடிப்படையிலான அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், போதைப் பொருள் பரவல் குறைவாக உள்ள மாநிலம் என்று தமிழக அரசு என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
நாட்டின்பல்வேறு மாநிலங்களில் போதைப் பொருள் பயன்பாட்டு மற்றம் பரவல் குறித்து மேக்னிடிடியூட் ஆஃப் சப்ஸ்டேன்ஸ் யூஸ் ஆஃப் இண்டியா என்ற இந்திய அரசின் அறிவியல் ஆய்வு நடத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் குறைந்த அளவிலான பயன்பாடு மட்டுமே உள்ளது தெரியவந்துள்ளது.
போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான நடவடிக்கையில் சட்டம் மற்றும் விழிப்புணர்வு என பல்வேறு முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இத்தகைய முயற்சிகள் பாரம்பரிய சட்ட அமலாக்கத்திற்கு அப்பாற்பட்டது மற்றும் பல்முறை அணுகுமுறையை உள்ளடக்கியது ஆகும் என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.