Share via:

நடிகர் விஜய்க்கும் அ.தி.மு.க.வுக்கும் கூட்டணி இருக்கும் என்று
கூறப்பட்டு வந்த நேரத்தில் அமித் ஷாவை சந்தித்து, அந்த பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி
வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பது கிட்டத்தட்ட
முடிவாகிவிட்டது. இப்போது பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. பயணிப்பதால் விஜய் கட்சியால் கூட்டணி
வைக்கவே முடியாது. விஜய் நிலை என்னாகும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
இது குறித்து நாம் தமிழர் கட்சியினரிடம் பேசினோம். ‘’எடப்பாடி
பழனிசாமி மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொரிவதற்கு
சமம். இந்த தேர்தலில் எப்படியாவது சீமானை பேசி சமாதானபடுத்தி எடப்பாடியுடன் நிற்க வைக்க
ஆசைப்பட்டோம். பா.ஜ.க. இருக்கும் இடத்தில் நாம் தமிழர் இருக்க முடியாது. எனவே, மீண்டும்
தனித்து நிற்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இப்போது விஜய் வந்திருக்கிறார் என்றாலும்
மூன்றாவது இடம் எங்களுக்கு உறுதியாகக் கிடைக்கும்…’’ என்று பேசினார்கள்.
விஜய் கட்சியினர், ‘’எடப்பாடி பழனிசாமி ஒரு நல்ல வாய்ப்பைக் கெடுத்துக்கொண்டார்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு, குடும்ப அரசியல், ஊழல்கள், வரிகள் உயர்வு, தேர்தல் வாக்குறுதி
நிறைவேற்றாதது என்று மக்கள் விரோத ஆட்சி நடத்தி வரும் திமுக மீது மக்கள் வெறுப்பில்
இருக்கிறார்கள். அந்த வெறுப்பில் திமுகவை வீழ்த்த அதிமுகவை ஆதரிக்கலாம் என்று எங்கள்
கட்சியினர் நினைத்தார்கள்.
ஆனால், அவர் அமித்ஷா வீட்டு வாசலில் நிற்கிறார். பத்து தோல்வி
பழனிசாமி பாஜகவோடு கூட்டணி வைக்கிறார், பிரிகிறார், மீண்டும் கூட்டணி வைக்கிறார். இந்த
நம்பகத்தன்மையற்ற அரசியலால், டெல்லியின் அடிமை கட்சியாக அதிமுகவை மாற்றிவிட்டதால் மக்கள்
அதிமுக மீதும் வெறுப்பில் இருக்கிறார்கள். பாஜக எதிர்ப்புணர்வு கொண்ட தமிழ்நாட்டு மக்கள்
ஏற்கனவே அதிமுக பாஜக கூட்டணியை தோற்கடித்தனர். இது ஒரு தோற்றுப்போனக் கூட்டணி. மீண்டும்
கூட்டணி அமைக்கிறார்கள். மீண்டும் தோற்பார்கள். திமுக எதிர்ப்பால் தான் அதிமுக வளர்ந்தது.
இப்போது அதிமுக அழிவின் விளிம்பில். கூடவே சங்கி சகவாசம். மக்களின் நம்பிக்கையை அதிமுக
இழந்துவிட்டது.
திமுகவையும் வெறுக்கிறேன் பாஜகவையும் வெறுக்கிறேன் என்பவர்கள்
இனி விஜய்யை மட்டுமே ஆதரிப்பார்கள். திமுகவிற்கு எதிரான வாக்குகளை, பாஜகவிற்கு எதிரான
வாக்குகளை, பாஜகவிற்கு அடிமையாக போன அதிமுகவிற்கு எதிரான வாக்குகளை தவெக பெறும். சிறுபான்மையினர்
பெரும்பான்மையாக எங்களை ஆதரிப்பார்கள் என்றாலும் கடுமையான போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும்.
சீமான் எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. எப்படியும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்போம்’’
என்கிறார்கள்.
முதல்ல மூணாவது இடத்தைப் பிடிக்க முடியுமான்னு பாருங்க புரோ.