Share via:
வங்கக்கடலில் நாளை புயல் உருவாக உள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பதிகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி மாறி தற்போது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இதற்கிடையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தற்போது விசாகப்பட்டினத்தில் நிலை கொண்டிருக்கிறது. இது அங்கிருந்து 380 கி.மீ. தொலைவில் கிழக்கு தென்கிழக்கு பகுதியில் மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து வருகிற 18ம் தேதி வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இது மோங்கா, கொபுரா கடற்கரை இடையே கடக்கும் போது மணிக்கு 55கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் இந்திய வானிலை மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் தற்போது புயலாக மாறும் என்றும் அவ்வாறு அது புயலாக மாறினால், அதற்கு மாலத்தீவுகள் பரிந்துரைத்த ‘மிதிலி’ என்றும் பெயரிடப்படும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து பின்னர் வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயலின் தாக்கமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.