Share via:
இன்று இரவு 7 மணிக்கு டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் நரேந்திர
மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். இதையடுத்து, பல்வேறு நாட்டுத்
தலைவர்களும், கட்சித் தலைவர்களும் டெல்லியில் குவிந்துவருகிறார்கள்.
நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க.
240 இடங்களில் வெற்றி பெற்றது என்றாலும் தனிப் பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்கள்
கிடைக்கவில்லை. அதேநேரம், கூட்டணிக் கட்சியினர்
எண்ணிக்கையுடன் சேர்த்து 293 இடங்கள் கிடைத்துள்ளது.
இதையடுத்து நடந்த பாஜக கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில்,
என்.டி.ஏ. நாடாளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து
ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, என்டிஏ எம்.பி.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார்.
இதை ஏற்றுக் கொண்ட திரவுபதி முர்மு ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இரவு 7.15 மணிக்கு
புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில், பிரதமர் மோடிக்கு
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து
வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொள்ள உள்ளனர். இன்று
சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 4 அமைச்சர் பதவிகளும், நிதிஷ்குமாரின் ஜேடியுவுக்கு
2 அமைச்சர் பதவிகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு அண்டை நாடுகளின்
தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இலங்கை, வங்கதேசம், பூடான்,
நேபாளம், மாலத்தீவுகள், செஷல்ஸ் மற்றும் மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் தங்கள்
வருகையை உறுதி செய்துள்ளனர்.