Share via:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிக்குட்பட்ட பெருமாநல்லூர் சாலை அமைத்துள்ளது. இங்கு பாண்டியன் நகர் சத்யா காலனியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் உள்ள கோவில் விசேஷங்களுக்கு தேவையான பட்டாசு நாட்டு வெடிகளை வீட்டில் இருந்தபடியே தயாரித்து கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 8) மதியம் திடீரென்று கார்த்திக் வீட்டில் இருந்து வெடிசத்தம் கேட்டது. இதில் அவர் வீடு தரைமட்டமாக சேதமடைந்தது. இந்த வெடி விபத்தில் சிக்கிய ஒருவர் உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் 100 மீட்டர் தாண்டி விழுந்ததாக கூறப்படுகிறது.
மேலும் 9 மாத பெண் குழந்தையும் இந்த வெடிவிபத்தில் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கண்ணீருடன் தெரிவித்தனர். மேலும் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமார் என்பவர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்தியின் வீடு தரைமட்டமான நிலையில், அவரது வீட்டிற்கு அருகில் இருந்த 10க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேமடைந்துள்ளன. இது குறித்து வழக்குப்பதிவு செய்த திருமுருகன்பூண்டி போலீசார் கார்த்திக் வீட்டில் மேலும் சில நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து நடந்த பகுதியில் பலத்த போலீசார் தீவிர சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.