Share via:

இந்திய அரசியலை அயோத்தி
மாற்றியது போல் தமிழக அரசியலை திருப்பரங்குன்றம் மாற்றும். அங்கே ஸ்ரீராமன் இங்கே திருமுருகன்.
அங்கே பாபர், இங்கு சிகந்தர். மிகப்பெரும் எழுச்சி உருவாகி வருகிறது. கந்தன் மலையை
கை வைத்தவர், அரசியலில் இனி கந்தல் ஆவது உறுதி என்று தமிழக அரசுக்கு எதிராக பா.ஜ.க.வினர்
போர்க்குரல் எழுப்புகிறார்கள்.
இதற்கு அமைச்சர்
சேகர்பாபு இன்று திருப்பரங்குன்றம் போராட்டம் குறித்து, ‘’தி.மு.க. ஆட்சிக்கு அபாயத்தை
உருவாக்கும் வகையில் மதுரையில் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
அங்கு போராட்டம் நடத்தியவர்கள் இந்து அமைப்புகள் அல்ல, பாரதிய ஜனதா கட்சியினர். தேவையின்றி
பிரச்னை எழுவதை அந்த பகுதி மக்கள் விரும்பவில்லை’’ என்று கூறியிருக்கிறார்.
முன்னதாக, ‘பாபர்
மசூதி போன்ற சம்பவம் திருப்பரங்குன்றத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது’ என்பதற்காகவே போராட்டத்துக்கு
அனுமதி மறுக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பு விளக்கம் கூறியது. ஆனாலும்
நீதிபதிகள், “பழங்காநத்தத்தில் மாலை 5 மணி முதல் ஆறு மணி வரை (பிப்ரவரி 4) ஆர்ப்பாட்டம்
நடத்த அனுமதி வழங்கப்படுகிறது” என கூறினார்கள்.
நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து
பழங்காநத்தத்தில் திரண்டு இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். குன்றம் காப்போம்
குமரனை காப்போம் என்று கோசத்தோடு மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே ஆயிரக்கணக்கான
மக்கள் திரண்டனர். இவர்களை இந்துக்கள் அல்ல பா.ஜ.க.வினர் என்று அமைச்சர் சேகர் பாபு
கூறியது சர்ச்சையாக மாறியிருக்கிறது.
அதோடு ஹெச்.ராஜா,
‘’அயோத்தியாக திருப்பரங்குன்றம் மாறிவிடக் கூடாது என்று நீதிமன்றத்தில் கூறுகிறார்கள்.
அங்கே ராமன், இங்கே முருகன். அப்படித் தான் மாறும்’’ என்று மதக்கலவர அபாயத்துக்குத்
தூண்டில் வீசினார். இதையே மதக்கலவரம் தூண்டி தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து என்று சேகர்
பாபு இன்று அலறல் ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்துப்
பேசும் இஸ்லாமியர்கள், “தர்காவை இடமாற்றுமாறு இந்து முன்னணியினர் கூறுகின்றனர்.
அதை எங்களால் நிறைவேற்ற முடியாது. நாங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியர்கள்தான்.
வேறு எங்கிருந்தும் வரவில்லை. பாஜகவும் இந்து முன்னணியும் பிரச்னையை ஏற்படுத்துகின்றன.
காலம்காலமாக தர்கா எப்படி செயல்பட்டு வந்ததோ, அதே அப்படியே தொடர வேண்டும் என நினைக்கிறோம்.
மலையில் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தினார். ஆடு, கோழிகளை உரிக்கும் இடம், சமையல் செய்யும்
இடம் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். ஆனால், ஆடுகளை பலியிடுவதற்கு அவர் தடை விதித்துள்ளார்.
கோவிலுக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை” என்கிறார்.
அதேநேரம் பாஜக மாநில
பொதுச்செயலாளர் இராம.சீனிவாசன், ‘’சில இஸ்லாமிய அமைப்பினர், தோளில் கிடாவை போட்டுக்
கொண்டு மலையில் ஆடு வெட்டுவதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். இந்துக்களின் உணர்வுகளை
புண்படுத்துகின்றனர். ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி உடன் வந்தவர்கள்
நடந்து கொண்ட விதம், எஸ்டிபிஐ போராட்டம், இந்துக்களுக்கு எதிராகப் பேசியது என அவர்கள்
தான் பிரச்னையை ஏற்படுத்துகின்றனர்’’ என்கிறார்.