Share via:
திருச்செந்தூரில் கனமழை காரணமாக மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வதந்திகள் பரவாமல் இருக்க நடப்பு நிலவரத்தை ஒலிப்பெருக்கி மூலம் தெரிவிக்க மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வரும் கனமழை காரணமாக திருந்செந்தூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் எந்த வாகனமும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிப்போயுள்ளனர். இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருச்செந்தூரில் மின் இணைப்பு மற்றும் தொலை தொடர்பு சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வதந்திகள் பரவுவதை தடுக்க ஒலிப்பெருக்கி மூலம் நடப்பு நிலவரத்தை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தென் மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அதில் சிக்கியுள்ளவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புக்குழுவினர் தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கோவை சூலூர், ராமநாதபுரத்தில் இருந்து நெல்லை வந்த ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.