Share via:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளநீர் போல் தேங்கியுள்ள மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி கருணாநிதி எம்.பி நேரில் பார்வையிட்டார்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வரும் காரணத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் படகுகள் மூலம் பொது மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழையால் பொதுமக்கள் அவதியுறும் செய்தி கேட்டு, டெல்லியில் இருந்து விரைந்த தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரான கனிமொழி கருணாநிதி எம்.பி தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் கொட்டும் மழையில் சாலைகளில் நடந்து சென்றும், பேருந்தில் பயணித்தும் சென்ற கனிமொழி எம்.பி. அங்கு பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறியும், அவர்களின் குறைகளை கேட்டறிந்தும் அவற்றை நிவர்த்தி செய்தார்.
இதைத்தொடர்ந்து கனிமொழி எம்.பி.பேசும்போது, ‘‘மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம். மேலும் மருத்துவம், உணவு, உள்ளிட்ட அவசர உதவி தேவைப்படுவோர் வாட்ஸ் அப் செயலி மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முன்வரும் தன்னார்வலர்களும் இப்பணியில் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். மேலும் 80778-80779 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்களுக்கு தங்களுக்கு தேவையான உதவிகளை கேட்கலாம் என்றும் வலிறுத்தியுள்ளார்.