Share via:
விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க. தாராளமாக பங்கேற்கலாம் என்று வி.சி.க.தலைவர் தொல். திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ள சம்பவம் தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளில் பிரதான கட்சியாக இருப்பது தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி. தமிழகத்தில் மதுக்கடைகளை மூட அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிற அக்டோபர் மாதம் 2ம் தேதி கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாட்டை நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ‘‘வி.சி.க. நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க.வும் தாராளமாக பங்கேற்கலாம். மக்கள் பிரச்சினைக்காக சாதிய, மதவாத சக்திகள் தவிர பிற எந்த சக்திகளோடும் இணைய தயாராக உள்ளோம். தமிழகத்தில் மதுக்கடைகளை மூட அரசு முன் வர வேண்டும் என்று தெரிவித்தார்.
தி.மு.க. கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்து வரும் வி.சி.க. திடீரென்று அ.தி.மு.க.வுடன் நட்புக்கரம் நீட்டுவதாக தி.மு.க.வினர் அதிருப்தியில் உள்ளனர். இதற்கு முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்ல. உண்மையான குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று தி.மு.க.வுக்கு எதிராக பேசினார். தற்போது அ.தி.மு.க.வுக்கு அழைப்பு விடுக்கிறார். இப்படியே போனால் 2026 சட்டமன்ற தேர்தலில் வி.சி.க., தி.மு.க. கூட்டணியில் நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.