Share via:
தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து தன்னுடைய பவரைக் காட்டுவதற்கு
ஆசைப்பட்ட அண்ணாமலையை, ஆறே தொகுதிகளுக்குள் அடக்கி வைத்ததால், ஆவேசமாகி பொறுப்பைத்
தூக்கி எறிந்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. தேர்தல் நெருங்கிவிட்டதால் அண்ணாமலையை
சமாதானம் செய்வார்களா அல்லது அலட்சியம் செய்வார்களா என்பது புரியாமல் பாஜகவுக்குள்
பஞ்சாயத்து நடக்கிறது.
அதிமுகவை வம்பிழுத்த காரணத்தாலே அண்ணாமலை மாற்றப்பட்டு நயினார்
நாகேந்திரன் பதவிக்கு கொண்டுவரப்பட்டார். சமீபத்தில் நடந்த கூட்டணிப் பேச்சுவார்த்தையில்
அண்ணாமலைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவிலும்
அண்ணாமலை இடம்பெறவில்லை.
அண்மையில் மோடி தமிழ்நாடு வந்த போதும் அண்ணாமலைக்கு முக்கியத்துவம்
கொடுக்கப்படவில்லை. இதையடுத்து அண்ணாமலையை 6 தொகுதிகளுக்கான பொறுப்பாளராக நயினார் நாகேந்திரன்
நியமித்தார். தமிழ்நாடு முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் செய்ய விரும்பிய நிலையில்
அண்ணாமலைக்கு கோவை சிங்காநல்லூர், மதுரை தெற்கு, சென்னை விருகம்பாக்கம், சிவகங்கை
மாவட்டம் காரைக்குடி, தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம், குமரி மாவட்டம் பத்மநாபபுரம்
ஆகிய 6 தொகுதிகளுக்கு மட்டுமே சுற்றுப்பயண பொறுப்பாளர் பணி வழங்கப்பட்டிருந்தது.
இதை மாற்றுவதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை
என்பதால், தனது தந்தை உடல்நிலையைக் காரணம் காட்டி இந்த பொறுப்பில் இருந்து விலகியிருக்கிறார்.
அதே நேரத்தில் பாஜக பிரச்சாரத்திற்கு தயாராக உள்ளேன். கட்சி
சொல்லும் வேலையை நான் செய்வேன். யார் முதல்வராக வேண்டும், யாருக்காக வேலை பார்க்க
வேண்டும் என பாஜக தெளிவாக உள்ளது. நானும் ஒரு தொண்டர் தான். கட்சி சொல்வதை கேட்பதற்கு
நான் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியிருக்கிறார்.
இந்த அறிவிப்பையடுத்து ஒட்டுமொத்த பொறுப்பாளர்கள் அறிவிப்பையும்
தமிழக பாஜக திரும்பப்பெற்றுள்ளது. முழு பிரசாரப் பொறுப்பை எதிர்பார்க்கிறாராம் அண்ணாமலை.
இதனை நயினார் ஏற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு இல்லை என்பதால் மோதல் மோசமாகவே வாய்ப்பு அதிகம்
என்கிறார்கள்.
