Share via:
எப்போதும் வெட்டு ஒண்று துண்டு ரெண்டு என்று தெளிவாகப் பேசும்
திருமாவளவன், இப்போது வேண்டுமென்றே குழப்பமாகப் பேசுவதைக் கண்டு அவரது ஆதரவாளர்களே
ஆச்சர்யம் அடைந்திருக்கிறார்கள். ஆதவ் அர்ஜுனை பேச விட்டு வேடிக்கை பார்த்த திருமாவளவன்
இப்போது இரண்டாவது பெரிய சக்தியாக விஜய் வளரலாம் என்று கூறியிருப்பது மற்றும் ஒரு சர்ச்சையைக்
கிளப்பியிருக்கிறது.
ஆதவ் அர்ஜுன் பேசிய விவகாரத்தில் இரண்டு நாட்கள் அமைதியாக இருந்தது
ஏன் என்று திருமாவிடம் கேட்டதற்கு, ’’எனக்கு கட்சி நலனும் முக்கியம். ஆதவ் அர்ஜுன்
நான் முன்பு பேசியதையே பேசினார். அதேநேரம் எங்கள் பொதுச் செயலாளர் ரவிக்குமார் கூட்டணி
நலனுக்காகப் பேசினார். எனக்கு இரண்டும் முக்கியம் என்பதால் அமைதியாக இருந்தேன். ஆதவ்
பேசியது தவறு இல்லை. ஆனால், இடம், பொருள், ஏவல் அறிந்து பேச வேண்டும். அவரது பேச்சு
முதிர்ச்சியில்லாத பேச்சு’ என்று மட்டும் முடித்துக் கொண்டார்.
அதோடு, இரண்டாவது பெரிய கட்சியாக இப்போது வரை அ.தி.மு.க. இருக்கிறது.
பா.ஜ.க. அந்த இடத்துக்கு வருவதற்கு முயற்சி செய்தது. அதற்கு வாய்ப்பு கிடையாது. அடுத்த
தேர்தலிலும் பா.ஜ.க.வுக்கு அந்த வாய்ப்பு கிடையாது. ஆனால், விஜய் வருகிறார். அவருக்கு
இரண்டாம் இடத்துக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது’’ என்று பேசியிருக்கிறார்.
இத்தனை நாட்களும் தி.மு.க.வினர் நிறைய பேர் திருமாவளவனுக்கும்
ஆதரவாளராக இருந்தனர். அவர்கள் இப்போது தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்கள்.
அவர்கள் திருமாவளவனுக்கு கேள்விகள் எழுப்புகிறார்கள்.
அதன்படி, ‘’அ.தி.மு.க. எங்கள் மாநாட்டுக்கு வரலாம் என்று பிரச்னையைத்
தொடங்கி வைத்த திருமாவளவன் இப்போது விஜய்யை இரண்டாம் இடத்தில் வைத்துப் பேசியிருப்பது
திட்டமிட்ட பேச்சாகவே பார்க்கப்படுகிறது. தன்னால் அ.தி.மு.க.வுக்கு அல்லது விஜய் கட்சியுடன்
கூட்டணிக்குச் செல்ல முடியும் என்பதையே கோடிட்டுக் காட்டுகிறார். அதேநேரம், கூட்டணி
என்றால் தி.மு.க.வுடன் மட்டும் தான் என்று பல்டி அடிக்கிறார்.
“ஒவ்வொரு தேர்தலிலும் விசிகவை வேண்டாம் என சில திமுக மாவட்ட
செயலாளர்கள் கூட கட்சியிடம் சொல்றாங்க அந்த தகவல்கள் எங்களுக்கும் வருகிறது” என்கிறார்.
அது உண்மையாக கூட இருக்கட்டும் ஆனால் அவர் சொல்லும் அந்த சில திமுக மாவட்ட செயலாளர்கள்
திமுக தலைமையிடம் தான் தங்கள் கருத்தை சொல்கிறார்கள். யாரும் ஆதவ் அர்ஜூனா போல டிவி
சேனல் நேரலையில் சொல்லி கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தவில்லையே?’’ என்று பொங்குகிறார்கள்.
மேலும், ‘’தமிழ்நாடு அரசு மகளிர்களுக்கு தரும் உரிமைத் தொகை டாஸ்மாக்
கடைகளுக்கு தான் செல்கிறது என்கிறார் ஆதவ் அதற்கு என்ன ஆதாரம்? 2026 சட்டமன்ற தேர்தலில்
எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்கிறார் எப்படி? டாஸ்மாக் வருமானத்தில்
தான் தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் எல்லாம் செய்யப்படுகிறதா? சினிமாவில் நடித்து
4 வருஷத்துக்கு முன்னாடி அரசியலுக்கு வந்தவர் துணை முதல்வர் ஆகலாமா என யாரை குறி வைக்கிறார்?
5. திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா ஏன் பெரம்பலூர் பொது தொகுதியில் போட்டியிடாமல்
நீலகிரி தனித் தொகுதியில் போட்டியிடுகிறார் என்கிற கேள்விக்கு உங்கள் பதில்?’’ என்றெல்லாம்
கேள்வி எழுப்புகிறார்கள்.
இதற்கெல்லாம் திருமாவளவன் பதில் சொல்வாரா..?