Share via:
வருகிற அக்டோபர் மாதம் 2ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இம்மாநாட்டிற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஏனென்னறால் ஆளும் தி.மு.க. கூட்டணியில் இருந்து கொண்டே வெளிப்படையாக அ.தி.மு.க. அழைப்பு விடுப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தி.மு.க.வினர் கடும் கோபத்தில் உள்ளனர்.
அந்த கோபத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் மற்றொரு அரசியல் தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளார் தொல்.திருமாவளவன். தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு, மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார் தொல்.திருமாவளவன்.
விழுப்புரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், சாதி ஒழிப்பு போராளி இமானுவேல் சேகரன் நினைவுநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட வீரவணக்கம் செலுத்தப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார். அதன் பின்னர் அவர் பேசும்போது, மது, போதை பொருட்களை அழிக்க நெடுங்காலமாக போராடி வருகிறோம் என்று தெரிவித்த அவர், மதுவை ஒழிக்க மகளிரின் உரிமை ஒலிக்க வேண்டுமென்பதால் போதை ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது. மதுவை ஒழிக்க எங்களுடன் இணைந்து போராட வேண்டும். மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டியிருக்கிறது என்று பல்வேறு கருத்துகளை முன்வைத்து பேசினார்.
அதைத்தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியுள்ள விஜய்யும், இந்த மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என்று பொதுவெளியில் அழைப்பு விடுத்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், தி.மு.க. கூட்டணியில் இருந்து கொண்டே அ.தி.மு.க. மற்றும் தமிழக வெற்றிக்கழகத்திற்கு அழைப்பு விடுப்பதால் ஏற்படும் கூட்டணி கசப்புகளை அவர் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். இருப்பினும் இவ்வாறு செய்கிறார் என்றால், தி.மு.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தொல்.திருமாவளவன் தலைமையிலான வி.சி.க. யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.