Share via:
அதிக சீட் வாங்குவதற்காக தேர்தல் நெருக்கத்தில் கூட்டணிக் கட்சிகள்
கொஞ்சம் கெத்தாகப் பேட்டி கொடுப்பது சகஜமான ஒன்று. அந்த வகையில் கம்யூனிஸ்ட் கட்சியினர்
உரக்கக் குரல் கொடுத்துவிட்டு ஓய்ந்துவிட்டார்கள். அடுத்தபடியாக திருமாவளவன் ஆரம்பித்திருக்கிறார்.
நேற்றைய தினம் மதுரை ஆனையூர்
அருகே உள்ள முடக்கத்தான் பகுதியில் பேசிய திருமாவளவன், ‘’ஆளும் கட்சியோடு நாம் கூட்டணியில்
இருக்கிறோம். ஆனாலும் நமது கொடியை அகற்றி வருகின்றனர். இத்தனை பிரச்சனைகளை எதிர்கொண்டு
சமாளித்துக் கொண்டு போராடிக் கொண்டு இன்னும் ஆளுங்கட்சி கூட்டணியில் தான் நாம் நீடிக்கிறோம்.
ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டு ஆளுங்கட்சி கூட்டணியில் இருக்க வேண்டும் என கேட்பது
சராசரி மனிதனின் புத்தி. அது அரசியலில் சரிவராது.
அரசியலில் நாம் இருக்கும்போது எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு
தான் நாம் இருக்க வேண்டும். ஒரு பிரச்சனையை கவனத்தில் கொண்டு மட்டும் நாம் செயல்பட
முடியாது. அரசியலில் தெளிவு, பொறுமை, நிதானம் தேவை. நமக்கு ஆதரவான சக்திகள் யார்? நமக்கு
எதிரான சத்திகள் யார் என்பதை தெளிவாக முடிவு செய்ய வேண்டும். அதனால் தான் பாஜக பாமக
கட்சிகள் இடம்பெறும் அணிகளில் நாம் சேர மாட்டோம் என தெளிவாக முடிவெடுத்துள்ளோம். அதிமுகவோடு
சேர்வீர்களா? சேரலாம் பிரச்சனை இல்லை. ஆனால் அதிமுக பாஜகவோடு இருப்பதால் அது முடியாது…’’
என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
அதேபோன்று புதிய தலைமுறை சேனலுக்குக் கொடுத்திருக்கும் பேட்டியில்,
’’எங்கள் கூட்டணியில் பா.ம.க. வந்தால் வெளியேறுவோம். எந்த புதிய கட்சி எங்கள் கூட்டணிக்கு
வருவதையும் எங்களால் தடுக்க முடியாது. ஆனால், பா.ம.க., பா.ஜ.க. இருக்கும் கூட்டணியில்
இருக்க மாட்டோம்’ என்று கூறியிருக்கிறார்.
இதை வைத்து பார்க்கையில் கூட்டணியில் குடைச்சலைத் தொடங்கிவிட்டார்
என்றே தெரிகிறது. ஏற்கெனவே மக்கள் நலக்கூட்டணி வைத்து திமுக வெற்றியைத் தடுத்தவர்.
இப்போதும் அப்படியொரு சூழல் அமையும் என்று எடப்பாடி பழனிசாமி ஆர்வமுடன் காத்திருக்கிறார்.