Share via:
தேர்தலில் ஜெயிக்கிற கூட்டணியில் இருக்க வேண்டும் அதேநேரம், கூடுதல் தொகுதிகளும் வாங்கவேண்டும் என்ற ஆசை எல்லா கட்சியினருக்கும் இருக்கவே செய்யும். இதை சாதித்துக்கொள்ள ஒவ்வொரு கட்சியினரும் ஒரு வழியைக் கையாள்வார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் எல்லாம் டாக்டர் ராமதாஸ்க்கு வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தைக் கையில் எடுப்பார். வன்னியர்களால் இந்தியாவே திணறும் அளவுக்கு போராட்டம் நடக்கும் என்று எச்சரிக்கை கொடுப்பார். பேரம் முடிந்ததும் அடங்கிவிடுவார்.
அந்த வழியில் திருமாவளவன் முதலில் மதுவிலக்கு போராட்டத்தைக் கையில் எடுத்தார். ‘தி.மு.க.வும் அதே கொள்கையுடன் இருக்கிறது, விரைவில் மதுக்கடைகள் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்படும்’ என்று பழைய பாட்டையே தி.மு.க. திருப்பிப் பாடியதும் அந்த விவகாரம் நசநசத்துப் போனது. அதனால் அடுத்தபடியாக தனது அட்மின் மூலம் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்றதுடன் துணை முதல்வர் பதவிக்கும் அச்சாரம் போட்டு வைத்தார்.
உதயநிதியின் துணை முதல்வர் பதவிக்கு ஒரு ஆபத்து என்றதும் தி.மு.க.வினர் கடுமையாக எதிர்வினை ஆற்றிவருகிறார்கள். தனியே நின்று ஆட்சியைப் பிடித்து முதல்வர் பதவிக்கு வந்துவிடலாம் என்று ஆலோசனை சொல்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் இருக்கும் தி.மு.க. ஆதரவாளர்கள் ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதேநேரம், தி.மு.க.விடம் இருந்து எந்த பலனும் பெறாத வி.சி.க. தொண்டர்கள் இந்த நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்கள்.
தி.மு.க. கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரஸ் இது வரை அதிகாரத்தில் பங்கு கேட்டதில்லை எனும்போது விடுதலை சிறுத்தைகள் மட்டும் கூட்டணி மாறுவதற்காக இப்படி நாடகம் போடுவதாக தி.மு.க.வினர் குற்றம் சாட்டுகிறார்கள். இப்போது ஆதவ் அர்ஜுன் பேசுவதை தப்பு என்றும் சொல்லாமல் தவறு என்றும் சொல்லாமல், எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் பேசி அடுத்தகட்ட முடிவு எடுப்போம் என்று நழுவியிருக்கிறார் திருமாவளவன்.
அதிகாரம் வேண்டும் என்று கேட்பதற்குக் கூட விடுதலைச் சிறுத்தைகளுக்கு உரிமை இல்லையா உடன்பிறப்புகளே..?