Share via:
ராமதாஸ் கூட்டணிக்குள் வந்தால் விசிக வெளியேறும் என்று விடுதலை
சிறுத்தைகள் கட்சியினர் மீண்டும் மீண்டும் பிரசாரம் செய்துவருவதைக் கண்டு எரிச்சலான
திருமாவளவன் இன்று அவரது தொண்டர்களுக்கு அவசரக் கடிதம் எழுதியிருக்கிறார்.
வன்னியர் சமூக மக்களுக்கு விசிக எதிரானது என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்யாதீங்க
என்று கெஞ்சுகிறார். அவரது கடிதத்தில், ‘’தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரசியல்களம்
சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. ஊடகங்கள் அனலை ஊதி ஆதாரமில்லாத ஊகங்களையெல்லாம் பரபரப்புக்குரிய
செய்திகளாக்குவதில் தீவிரம் காட்டிவருகிறது. தேர்தல் குறித்து நமது கட்சி எத்தகைய நிலைபாட்டை
மேற்கொண்டுள்ளது என்பதைத் தெளிவுபடுத்திட விரும்புகிறேன்.
கடந்த கால்நூற்றாண்டு காலத் தேர்தல் அரசியலில் நாம் ஒருபோதும்
தேர்தல் ஆதாயங்களை மட்டுமே கருத்தில் கொண்டு, அதாவது, வெற்றி – தோல்விகளைக் கணக்கில்
கொண்டு முடிவெடுத்ததில்லை. கருத்தியலின் அடிப்படையில் இணக்கமான கட்சிகளோடு தேர்தல்
உறவுகளைத் தீர்மானித்துக் கூட்டணி அமைத்திருக்கிறோம்.
திமுக மற்றும் காங்கிரசு ஆகிய கட்சிகளோடு கடந்த காலங்களில் நாம்
முரண்பட்டு எதிர்நிலையில் நின்றிருக்கிறோம். ஆனால், தற்போதைய சூழலில் தேசம் தழுவிய
அளவில் நிலவிவரும் தீங்குநிறைந்த சனாதன அரசியலின் சதியை முறியடிக்க வேண்டிய தேவையை
உணர்ந்து, திமுக தலைமையிலான ‘மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில்’ நாம் அங்கம் வகித்து
செயலாற்றி வருகிறோம்.
ஏற்கனவே, 2001 மற்றும் 2011-சட்டமன்றத் தேர்தல்களில் திமுக தலைமையிலான
கூட்டணியில் நாம் இடம் பெற்றிருக்கிறோம். 2011 இல் அமைந்த திமுக கூட்டணியில் விசிகவும்
பாமகவும் இடம் பெற்றிருந்தன. ஆனால், அத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பை இழக்கும்
நிலை ஏற்பட்டது.
அதன்பின்னர், பாமக எடுத்த ‘சோசியல் எஞ்சினியரிங்’ என்கிற ‘சாதி
அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தும் தேர்தல் உத்தியைக்’ கையில் எடுத்தபோது தமிழக
அரசியல் களம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியது. அதன்பின்னர் தான் நாம், ‘பாஜகவுடன் மட்டுமின்றி
பாமகவோடும் இனி தேர்தல் உறவு இல்லை’ என்கிற நிலைபாட்டை மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
2016 இல் இடதுசாரிகள் மற்றும் மதிமுக ஆகிய தோழமைகட்சிகளோடு இணைந்து மக்கள்நலக் கூட்டணி
அமைத்து அப்போதைய சட்டமன்றப் பொதுத் தேர்தலைச் சந்தித்தோம். வெற்றிவாய்ப்பை இழந்தோம்.
அதன்பின்னர் காவிரிநீர்ச் சிக்கலையொட்டி திமுக முன்னெடுத்த முயற்சியின்
அடிப்படையில் ஒருங்கிணைந்து களமாடினோம். அதுவே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியாகப்
பரிணமித்தது. 2017இலிருந்து இக்கூட்டணி கருத்தியல் அடிப்படையில் களம்பல அமைத்து போராடி
வருவதுடன், அடுத்தடுத்து சில தேர்தல்களையும் சந்தித்து சாதனைகளைப் படைத்து வருகிறது.
குறிப்பாக, 2021-சட்டமன்றத் தேர்தல், 2024-நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி
அமைப்புகளுக்கான தேர்தல்கள் என இக்கூட்டணி தொடர்ச்சியாக மக்களின் நல்லாதரவோடு வெற்றிகளைப்
பெற்று வருகிறது.
தற்போது 2026-சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவுள்ளது. மதச்சார்பின்மை,
சமத்துவம், மாநில உரிமைகளை நிலைநாட்டும் பரந்துபட்ட நோக்கத்தில் – தெளிவான கொள்கை அடிப்படையில்
அமைக்கப்பட்டுள்ளது தான் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்பதை நாடறியும்.
கடைசி நிமிட தொகுதிப் பங்கீட்டுக்காக தேர்தல் நேரத்தில் அமைக்கப்படும் கூட்டணி என்பதாக
இல்லாமல், மதவெறி சக்திகளையும் அவர்களோடு கைகோர்த்துள்ள இன்னபிற கட்சிகளையும் வீழ்த்தும்
வகையில் இந்தக் கூட்டணியை அமைத்து, தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின்
அவர்கள் தலைமை ஏற்று வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார்.
அந்த வகையில் நாம் அவருக்கு உற்றத் துணையாக இந்தக் களத்தில் கைகோர்த்து
நிற்கிறோம். பாஜக தலைமையிலான ‘தேசிய ஜனநாயக கூட்டணியில்’ இடம்பெற்றுள்ள அதிமுக உள்ளிட்ட
அரசியல் கட்சிகளோடு, நாம் இத்தகைய கொள்கை அடிப்படையில் தான் முரண்பாடு கொண்டுள்ளோம்.
அதனடிப்படையில் நமது கருத்துகளையும் வெளிப்படுத்தி வருகிறோம். மற்றபடி தனிப்பட்டமுறையில்
தனிநபர் யார்மீதும் அல்லது எந்தவொரு கட்சியின்மீதும் நமக்கு காழ்ப்புணர்வு இல்லை. குறிப்பாக,
பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகளை அந்த வகையில்தான் மதிப்பீடு செய்து இந்த நிலைபாட்டை
மேற்கொண்டுள்ளோம்.
ஆனால், வன்னியர் சமூகத்தைச் சார்ந்த வெகுமக்களுக்கு எதிராக நாம்
முடிவெடுத்ததைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிட சிலர் முயற்சிக்கின்றனர். அதேபோல பாஜகவை
விமர்சித்தால் ஒட்டுமொத்த இந்துச் சமூகத்துக்கும் நாம் எதிரானவர்கள் என்பதைப் போன்ற
ஒரு தோற்றத்தை உருவாக்கிட சனாதன சக்திகள் முயற்சிக்கின்றனர். உண்மையில் குறிப்பான ஒரு
சாதியினருக்கோ அல்லது ஒரு மதத்தினருக்கோ எதிராக நமது கட்சி சிந்தித்ததுமில்லை; செயல்பட்டதுமில்லை..’’
என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
ராமதாஸ்க்கு பச்சைக் கொடி காட்டுகிறார் என்றே இதனை சொல்கிறார்கள்.
