Share via:
முஸ்லீம்கள் அதிக பிள்ளைகள் பெறுகிறார்கள், இந்துக்களின் தாலியைப்
பிடுங்கி அவர்களுக்கு காங்கிரஸ் கொடுத்துவிடும் என்றெல்லாம் தேர்தல் நேரத்தில் பிரசாரம்
மேற்கொண்டார் பிரதமர் நரேந்திரமோடி. முஸ்லீம்கள் மீதான நரேந்திரமோடியின் கோபம் இன்னமும்
தீரவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக அவரது மந்திரி சபை அமைந்திருக்கிறது. ஆம், ஒரே
ஒருவர் கூட முஸ்லீம் அமைச்சராக இல்லை.
மூன்றாவது முறை அமைக்கப்பட்டுள்ள மோடியின் அமைச்சரவையில் உள்ள
71 உறுப்பினர்களில் 5 பேர் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் இருவர் சீக்கியர்கள்,
இருவர் பவுத்தர்கள், ஒருவர் கிறிஸ்தவர்.
சீக்கியர்களில், பிரதமர் மோடியின் முந்தைய ஆட்சியில் அமைச்சராக
இருந்த ஹர்தீப்சிங் புரிக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபின் மற்றொரு
சீக்கிய ரான ரவ்னீத் சிங் பிட்டுவும் மத்திய இணை அமைச்சராகி உள்ளார். இவர் பஞ்சாப்
முன்னாள் முதல்வர் பியாந்தர் சிங்கின் பேரன் ஆவார். ரவ்னீத் பஞ்சாபில் தொடர்ந்து
15 வருடம் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்தார். இந்த தேர்தலுக்கு முன் பாஜகவில் இணைந்து,
லூதியாணாவில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார். இருப்பினும் மத்திய அமைச்சரான இவர்
மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட உள்ளார்.
மத்திய அமைச்சர் கிரண்ரிஜ்ஜு புத்த மதத்தினர். 3 முறை எம்.பி.யான
இவர், அருணாச்சல பிரதேசம் மேற்கு தொகுதியில் 4வது முறையாக வெற்றி பெற்று அமைச்சராகியிருக்கிறார்.
புத்த மதத்தவரான அதவாலே ராம்தாஸ் பந்துவும் மீண்டும் அமைச்சர் ஆகியிருக்கிறார்.
கேரளாவின் ஜார்ஜ் குரியன் கிறிஸ்தவ அமைச்சர். நாடாளுமன்ற இரு அவைகளிலும்
உறுப்பினர் அல்லாத இவர், இனி மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட உள்ளார்.
பா.ஜ.க.வில் ஒரே ஒரு முஸ்லீம் கூட எம்.பி.யாக தேர்வு செய்யப்படவில்லை.
அதனால் கொடுக்கப்படவில்லை என்பதை சிறுபான்மையினர் ஏற்க மறுக்கிறார்கள். கிறிஸ்தவர்களில்
ஜார்ஜ் குரியனுக்கு கொடுக்கப்பட்டது போன்று முஸ்லீம்களில் யாராவது ஒருவருக்குக் கொடுத்திருக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறார்கள்.