Share via:
சமீபத்தில் உதயநிதிக்காக எ.வ.வேலு நடத்திய இளைஞர் அணி மாநாட்டுக்கு சுமார் 200 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது மிகப்பெரும் சர்ச்சையாகியது. இந்நிலையில் கனிமொழிக்காக நடத்தப்பட்ட திமுக மேற்கு மண்டல மகளிர் மாநாடு 100 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சி தருகின்றன. ஏனென்றால், இதைவிட குறைந்த தொகைக்காகவே தூய்மைப் பணியாளர்கள், நர்ஸ்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறார்கள்.
மகளிர் மாநாட்டில் கலந்து கொண்ட புடவை கட்டும் பெண்களுக்கு கருப்புப் பட்டை, கருப்பு பூப்போட்ட புடவை, ஜாக்கெட் மற்றும் தையல் கூலி என ஒரு நபருக்கு 500 ரூபாய். அனைவரும் வந்து செல்வதற்கு பேருந்து, உணவு, குடிநீர் என ஒவ்வொரு நபருக்கும் 500 ரூபாய். இதுதவிர கலந்துகொண்டவர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக 500 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, மேடை, அலங்காரம் என்று ஒரு மீட்டிங்கிற்கு 100 கோடிக்கும் அதிகமாக செலவு செய்திருக்கிறார்கள். இந்த செலவைத் தவிர்த்து அந்தத் தூய்மைப் பணியாளர் பெண்கள், செவிலியப் பெண்களுக்கு நன்மை செய்திருக்கலாமே என்று மக்கள் முணுமுணுக்கத் தொடங்கிவிட்டனர்.
ஏனென்றால் திமுக ஆட்சிக்கு எதிராக மூன்று பிரிவினர்கள் தினமும் போராட்டம் நடத்திவருகிறார்கள். தூய்மை பணியாளர்கள் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம், தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதேபோன்று செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இப்போது சம ஊதியம் வேண்டி இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் ஆக்ரோஷமாக நடைபெற்று வருகிறது. இவர்கள் எதிர்பார்ப்பது சொற்பமான தொகை மட்டுமே. இளைஞர் அணி, மகளிர் அணியினர் பாராட்டு விழாவுக்கு செலவழித்த தொகையைக் கணக்கிட்டால் இது ரொம்பவே குறைவு என்கிறார்கள்.
பாராட்டுவதற்கு செலவழிக்கும் பணத்தை போராடுபவர்களுக்குக் கொடுங்கள் ஸ்டாலின். இல்லையென்றால் தேர்தல் களம் தானாகவே மாறிவிடும்.
