Share via:
மேட்ரிமோனியலில் மணமகன் மற்றும் மணமகள் தேவை என்று மணம் முடிப்பவர்கள் ஏராளம். சொந்தத்தில் இருந்து பெண் மற்றும் மாப்பிள்ளை எடுப்பது அரிதாகிவிட்டது.
இதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு ஒரு பெண் தன்வலையில் போலீஸ் எஸ்.ஐ. உள்ளிட்ட பல்வேறு ஆண்களை தன் காதல் வலையில் வீழ்த்தி பல லட்சம் ரூபாய் பணம் நகைகளை சுருட்டிய சம்பவம் கேரள மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் பொய்னாச்சி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 35 வயதான ஸ்ருதி என்ற பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்தார். இவர்தான் மேட்ரிமோனியலில் பல ஆண்களை தன் வலையில் வீழ்த்தியுள்ளார். இவரின் சுயரூபத்தை பாதிக்கப்பட்ட எஸ்.ஐ. ஒருவர் மூலம் தெரிந்து கொண்ட அந்த இளைஞர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் ஸ்ருதியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஸ்ருதி, திருமணத்திற்காக பெண் தேடும் ஆண்களை குறிவைத்து அவர்களிடம் இருந்து பணம் நகைகளை பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும் அந்த ஆண்களிடம் இன்ஸ்டா உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் நட்பை வளர்த்துள்ளார்.
ஸ்ருதியின் வலையில் வீழ்ந்த எஸ்.ஐ. ஒருவரிடம் இருந்து 5 லட்சத்தை பறித்துக் கொண்டு, அவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார். அதன் பேரில் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ. சிறையில் இருந்து வெளிவந்த பின்னர், ஸ்ருதி கடைசியாக திருமணம் செய்து கொண்டவரிடம் நடந்த அனைத்தையும் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்.
அதன் அடிப்படையில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த இளைஞர், போலீசில் புகார் செய்தார். இப்படி ஸ்ருதியின் காதல் வலையில் பல்வேறு ஆண்கள் விழுந்துள்ளது மேட்ரிமோனியல் மீதான நம்பிக்கையை மக்கள் மனதில் இருந்து குறைத்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.