Share via:
ஜனநாயகன் படம் வெளியாகாத சோகத்தில் இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு
மகிழ்ச்சியான ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. யாரும் எதிர்பாராத வகையில், தமிழக வெற்றிக்
கழகத்திற்கு விசில் சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்மூலம் முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே பொதுச் சின்னமான விசில் சின்னத்தில் போட்டியிடும்
வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இதற்கிடையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில்
விசில் சின்னம், கிரிக்கெட் பேட், ஆட்டோ ஆகியவற்றில் ஒன்று ஒதுக்குமாறு இந்திய தேர்தல்
ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்று விசில் ஒதுக்கப்பட்டிருப்பது
பெரிதும் கவனம் பெற்றிருக்கிறது. இந்த சின்னத்தை மக்களிடம் எளிதில் கொண்டு செல்ல முடியும்
என்று தவெகவினர் கூறுகின்றனர். விஜய் பல படங்களில் விசிலை பயன்படுத்தியுள்ளார். எனவே
பட்டி தொட்டியெங்கும் விசில் சின்னத்தை விளம்பரம் செய்ய முடியும்.
அதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களாக கரூர் கூட்ட நெரிசல் வழக்குகள்,
ஜனநாயகன் ரிலீஸ் பிரச்சினை போன்றவற்றால் தவெகவினர் மிகுந்த சோர்வில் இருந்தனர். இத்தகைய
சூழலில் விஜய் கேட்டிருந்த விசில் சின்னத்திற்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் அளித்திருப்பதன்
மூலம் அக்கட்சியினர் இடையே புதிய உற்சாகம் பிறந்திருக்கிறது.
இனி, எங்கெங்கும் விஜய் ரசிகர்களின் விசில் சத்தம் காதைப் பிளக்கப்போகிறது
என்பது மட்டும் உண்மை.
