Share via:
இஸ்ரேல் பாலஸ்தீன் இடையிலான போரை நிறுத்துவதற்குப் பல நாடுகள்
மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. அதேநேரத்தில் லெபனான் ஈரான் என ஒவ்வொரு நாடாக
இஸ்ரேல் தாக்கத் தொடங்கியது. இதற்கு ஈரான் மிகக் கடுமையாக பதிலடி கொடுத்துள்ள நிலையில்,
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நேரடியாக களத்தில் குதித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,
துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் வெள்ளை மாளிகையில்
ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, ஈரானின் தாக்குதலை சமாளிக்க இஸ்ரேல் ராணுவத்திற்கு
உதவிட வேண்டும் என அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் ஜோபைடன் உத்தரவிட்டார். ஈரான் நோக்கி
வரும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தவும் பைடன் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து இஸ்ரேல் கடற்பரப்பில்
நிலை நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் அமெரிக்காவின் இரண்டு கடற்படை கப்பல்களில்
இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டன. இதனால் ஈரானின் பல ஏவுகணைகள் இஸ்ரேல் எல்லையைத்
தொடும் முன்னரே சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன்.. இதையடுத்து மேலும் சில நாடுகள் களத்தில்
குதிக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன.
இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் நாடுகளான யுஏஇ, சவூதி அரேபியா,
கத்தார், குவைத், பக்ரைன், ஒமான் போன்ற பகுதிகளில் போர் மேகங்கள் தென்படவில்லை என்றாலும்,
இந்த நாடுகள் அனைத்தும் இஸ்லாமிய நாடுகளாக இருந்தாலும், ஏதோ ஒரு வகையில் ஈரானுடன் ஒரு
முரண்பாட்டுடன் இயங்கி வருபவை! இந்த சூழலில் ஈரானின் தாக்குதல் தீவிரமானால் நிச்சயமாக
அது பெரிய நாசகரமான போராக உருமாறக் கூடிய சூழல் இருக்கிறது.
ஈரான் ராக்கெட்டுக்ள் பறக்க ஆரம்பித்த அடுத்த நொடியே கச்சா எண்ணை
விலை 3% அதிகமாகி விட்டதாக செய்திகள் வந்து விட்டன! இங்கு போரினால் மக்கள் கொல்லப்படுவதும்,
நகரங்களின் அடிப்படை கட்டுமான வசதிகள் தகர்க்கப்படுவதையும் தாண்டிய ஒரு மோசமான பொருளாதார
வீழ்ச்சி ஏற்படும் அதனடிப்படையில் பல்லாயிரக்கணக்கான வேலை இழப்பு ஏற்படும். உடனடியாக
இல்லாவிட்டாலும் போர் உறுதியானால் வளைகுடா வாழ் வெளிநாடு தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும்
வேலை இழப்பு ஏற்படுவதை தவிர்க்க இயலாது!
இஸ்ரேலின் பாலஸ்தீனத்தையும் தாண்டிய லெபனான், ஜோர்டான் மீதான தாக்குதல்
மக்களுக்கு கவலையை விட கடும் கோபத்தை உருவாக்கி இருப்பதை உணர முடிகிறது. அதே நேரத்தில்
வெளிப்படையாக பேசாமல் ஒரு கனத்த மவுனத்துடன் மக்கள் இயங்குகின்றனர், அதற்கு பின்னால்
வேலை, தொழில் என்ற பொருளாதார காரணிகளே பிரதானமாக உள்ளது! ஈரானும் இந்த வாய்ப்பை தவறவிடாது,
ஏனெனில் கடந்த மே மாதம் ஈரான் அதிபர் இப்ராகீம் ரைஸி ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டுருக்கிறார்!
லெபனானில் சக்திவாய்ந்த ஹிஸ்புல்லா தலைவர் இஸரேலால் நேரடியாக கொல்லப்பட்டிருக்கிறார்.
துருக்கி, ரஷ்யா ஆதரவுடன் தன் அமெரிக்க-இஸ்ரேல் எதிர்ப்பை ஈரான் அடுத்த கட்டத்திற்கு
கொண்டு செல்லும் என்று இங்கு கணிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியா முழுக்கவே இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்திருப்பது
வளைகுடா வாழ் இந்தியர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. உயிருக்குப் பயந்து வேலையை
விட்டு ஊர் திரும்ப வேண்டிய அபாயம் அதிகரித்துவருகிறது.