Share via:
கட்டிட இடிபாடுகளுக்குள் தங்கள் குடும்பத்தினரும், உறவினர்களும் உயிருடன் இருக்கிறார்களா என்று பாலஸ்தீன மக்கள் தேடி அலையும் சோகக் காட்சிகள் நெஞ்சை பதறவைக்கிறது.
கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் போர் தொடங்கியது. போர் தொடங்கிய நாள் முதல் இஸ்ரேல் ராணுவம் காசா மீது வான்வழியாக ஆயிரக்கணக்கான குண்டுகளை வீச நகரத்தையே குப்பைமேடாக மாற்றியது. இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருப்பதாக ஹமாஸ் அமைப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். மருத்துவமனைகள், குடியிருப்புகள் என பாரபட்சமின்றி இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.
குழந்தைகள் மற்றும் பொதுமக்களை கொல்வதை இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாடுகளின் கோரிக்கையையும் இஸ்ரேல் தவிர்த்து வருகிறது. மேலும் ஐ.நா. சபை கொண்டு வந்த போர் நிறுத்த தீர்மானத்தையும் இஸ்ரேல் புறக்கணித்துவிட்டது. 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக வெளியான தகவலையடுத்து குழந்தைகளை கொல்வதை இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கனடா நாட்டு பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மேலும் ஹமாஸ் அமைப்பினர், குழந்தைகள் மற்றும் பெண்களை கேடயமாக பயன்படுத்துவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று இஸ்ரேல் தரப்பும், குழந்தைகள் மற்றும் பெண்களை கொன்று குவிப்பது இஸ்ரேல் தான் என்று ஹமாஸ் அமைப்பும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் சீட்டு கட்டு போல் சரிந்து கிடக்கும் கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் உடல்கள் இருக்கிறதா என்று பாலஸ்தீன மக்கள் தேடி அலைகின்றனர். இஸ்லாமிய முறைப்படி உயிரிழந்தவர்களின் உடலை 24 மணி நேரத்திற்குள் அடக்கம் செய்தால் தான் அவர்கள் ஆத்மா, மெக்காவை நோக்கி பயணம் செய்யும் என்ற நம்பிக்கை இஸ்லாமிய மக்களிடம் உள்ளது.
போர் தீவிரமாக நடைபெற்று வருவதால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பல நாட்கள் கழித்தே மீட்கப்படுவது பாலஸ்தீன மக்கள் மத்தியில் சோகத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எங்காவது உயிருடன் இருக்க வேண்டும் அல்லது உயிரிழந்தால் சடலமாவது உடனே கிடைக்க வேண்டும் என்ற பாலஸ்தீனர்களின் எண்ணம் சர்வதேச நாடுகள் மத்தியில் சோகத்தையும், போரை நிறுத்த முடியவில்லையே என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

